நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.
வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் அண்டாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என பொதுமக்களுக்குத் தான் உறுதியளிப்பதாகத் தெரிவித்த அவர், காலநிலை நன்றாக இருந்தால் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
வாக்காளர்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சமடையாமல் தமது வாக்குரிமையைப் பய்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இதற்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் வாக்களிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதன்படி வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வரும்போது முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்களிப்பதற்காக குமிழ் முனைப் பேனா ஒன்றையும் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.