“கடந்த காலங்களில், ‘அவர்களுக்கு’ வழங்கிய மக்கள் ஆணையை, இம்முறை எமக்கு வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை என்றால், நிராகரியுங்கள்; ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களை, நாங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்று பார்த்து, மக்கள் எங்களுடன் வருவார்கள். நீங்கள் தொடர்ந்து வாக்களித்தவர்கள், எதையும் செய்யாமல் மீண்டும் வருகின்றனர்; வாக்குக் கேட்கின்றனர். அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில், மக்கள் தீர்மானித்துச் சரியானவர்களைத் தெரிவு செய்து, நாடாளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும். இதுதான் முறைமையாகும்” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மாரிமுத்து கணபதிப்பிள்ளை (மாட்டீன் ) உடனான நேர்காணலின் போது தெரிவித்தார். அவருடனான செவ்வியின் விவரம் வருமாறு:
கே: வடக்கு தேர்தல் களத்தில், கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்ற குற்றச்சாட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து:
நான் கொழும்பைச் சேர்ந்தவன் இல்லை: எனது பிறப்பிடம், வாழ்க்கை எல்லாமே வடக்குத்தான். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட நான், இளமைக்கல்வியை நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணியம் வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையிலும் இராமநாதபுரம் ம.வித்தியாலயத்திலும் கற்றிருந்தேன் உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறப்பாக சித்தியடைந்தமையால், கொழும்பு பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி, பொருளியல் சிறப்பு பட்டம் பெற்று, கொழும்பு றோயல் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றுச்சென்றேன்.
றோயல் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக, உதவி அதிபராக, பிரதி அதிபராகத் தொடர்ந்து 30 வருடங்கள் சேவையாற்றியதுடன் இக்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்காமல் இருந்த கல்விமானிப் பாடநெறியை 2010ஆம் ஆ ண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராகக் கடமையாற்றி, 300 க்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட ஆசிரியர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமையுள்ளது.
இளைப்பாறிய பின்னர் மும்மொழி அபிவிருத்தி துரித செயலணியின் தமிழ் மொழிப் பணிப்பாளராகக் கடமையாற்றியதுடன் தொடர்ந்து, இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவும் கடமையாற்றி தொடர்ந்து, யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக 2015-2018 காலப்பகுதி வரையில் கடமையாற்றியுள்ளேன்.
கே: இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையுடைய ஒருவராகவும் கட்சியின் நீண்ட ஆதரவாளராகவும் இருந்த நீங்கள், அக்கட்சியிலிருந்து விலகி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியமைக்கான காரணம் என்ன?
இலங்கை தமிழரசுக் கட்சி என்பது, கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த எண்ணக்கரு வித்தியாசமாக இருந்துள்ளது. அதாவது, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவரட்ணம், வன்னியசிங்கம், வி. ஏ கந்தையா போன்ற ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்கள் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆனால், இப்போது அரசியல் தலைமைகளின் பலவீனத்தால் எமது இளைஞர், யுவதிகளின் உழைப்புகள் சுரண்டப்படுகின்றன.
இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொழிற்றுறைகளை விருத்தி செய்யவும் அரசாங்கத்துடன் பேரம்பேச வேண்டும்; எங்கள் வளங்களை, நாங்களே பயன்படுத்தக் கூடிய வகையில் செயற்பட வேண்டும். சாதாரணமாக, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை என்பது, அங்கு செல்லும் நோயாளர்களை, வவுனியாவுக்குக் கொண்டு செல்லும் ஒரு வைத்திய சாலையாகவே உள்ளது. அதைக் கூட வலுப்படுத்த முடியாதவர்களாக எங்களது அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள். தமிழரசுக் கட்சி பற்றிய பரிபூரணமான விளக்கமற்றவர்கள் தான், தற்போது கட்சியில் இருக்கிறார்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி, ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற அடையாளம் இல்லாதவர்களுடன், கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்துவிட்டோம் என்பதற்காக, கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. கட்சி கொள்கை பிறழ்வாகச் செல்வதாகத் தெரிந்துகொண்டால், சரியான பாதையை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
கடந்த 10 வருட காலத்தில், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், யார் சொன்னதை செய்கின்றனர், செய்பவற்றைச் சொல்கின்றனர் எனப் பார்த்தால், அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான். குறிப்பிட்ட ஒருவழியில் நின்று, சொன்னதைச் செய்து, செய்வதைச் சொல்லி, ஒரு கட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களாக உள்ளனர். ஆதனால்தான், நான் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசிய முன்னணிக்கு மாறியுள்ளேன்.
நான், ஓர் அரசியில் பாட ஆசிரியர்; என்னுடைய ஆசானாகிய பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா தான், ‘தேசியம்’ என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கொடுத்தவர். அவர்தான் ‘சமஷ்டி’ என்ற நூலை எழுதினார். இதற்குப் பின்னர், இலங்கையின் ‘அரசியல் ஞானி’ என்று ஏ.ஜே. வின்சனை மட்டும் குறிப்பிடுவார்கள். அவருடைய பல விரிவுரைகளில் பங்குபற்றி இருக்கின்றேன். இப்படியான அரசியல் அனுபவத்தைக் கொண்டுதான், என்னுடைய அரசியல் பார்வையைக் கட்சிகள் மீது செலுத்தியபோது, இலங்கை தமிழரசுக் கட்சி படிப்படியாகத் தோல்வி கண்டு வருவதை, நேரடியாகக் கண்டுகொண்டேன்.
அதை மறுசீரமைப்பது, திருத்தி நல்ல பாதைக்குக் கொண்டு செல்லவது தொடர்பாகப் பல தடவைகள் எடுத்த முயற்சிகள், தோல்வி கண்டன. இதனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கலாம் என முடிவு செய்தேன்.
கே: கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலும் அரசியலில் பேசுபொருளாகவும் உள்ள யாழ்ப்பாணம் இரணைமடு குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பிலான நிலைப்பாடு என்ன?
இரணைமடுவுக்குச் சரியான திட்டம் எதுவென்றால், பொறியியலாளர் ஆறுமுகத்தின் திட்டம் தான். அதாவது, நன்னீரைச் சுண்டிக்குளத்தில் மறித்து, தொண்டமானாறு வரை கொண்டு சென்று, தொண்டமனாறு கடல்நீரேரியையும் ஆனையிறவு கடல்நீரேரியையும் நன்னீராக மாற்றி, அதைச்சூழவுள்ள பகுதிகளில், உவர் நீர்ப் பரம்பலை மாற்றுவது என்ற பாரிய திட்டத்தை, 1953-1954களில் ஆறுமுகம் வெளிப்படுத்தியிருந்தார். இந்தத்திட்டம் ஒன்றுதான், மிகப்பொருத்தமான திட்டமாகும்.
தற்போது இரணைமடுக் குளத்தை வைத்து, தண்ணீரை அங்கு கொண்டு போகின்றோம்; தண்ணீரை இங்கு வைத்திருக்கின்றோம் என்பது, யாழ். மாவட்ட மக்களையும் கிளிநொச்சி மாவட்ட மக்களையும் மோதவிட்டு, முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியே தவிர, இது தொடர்பாக, ஒழுங்காகச் சிந்தித்துச் செயலாற்றக் கூடியவர்கள் வலுக்குறைவானவர்களாகவே காணப்படுகின்றனர்.
குறிப்பாக, நெடுந்தீவில் கடல் நீரை நன்னீராக மாற்றி வழங்கப்படுகின்றது. அதைவிட, ஆங்காங்கே நன்னீர் கிணறுகள் காணப்படுகின்றன. அவற்றை முன்னேற்றினால், யாழ். மாவட்டத்துக்குப் போதுமான நீர்ப்பாசனத்தை வழங்க முடியும்.
அதைவிட்டு விட்டு, ஆசிய அபிவிருத்தி சொல்கிறது; உலக வங்கி சொல்கின்றது என்பதற்காக, போர்க் குணத்தைக்காட்டாமல், யாழ். மக்களுக்கும் கிளிநொச்சி மக்களுக்கும் அறிவூட்ட வேண்டும்.
மக்களுக்கு அரசியல் அறிவூட்டுதல், அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாகவுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் அந்தப் பணிகளை, இதுவரை செய்யவில்லை; அதனால் ஏற்பட்ட விளைவுதான், இவையெல்லாம்.
யாழ். மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் வழங்கக்கூடாது என்பதோ, கிளிநொச்சி மாவட்ட மக்கள் மாத்திரம் தண்ணீரை அனுபவிக்க வேண்டும் என்பதோ என்னுடைய கருத்தல்ல; இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பல்வேறுபட்ட வழிவகைகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி, பரிசீலிக்கப்படவில்லை; ஒரு புத்திசாலித்தனமான அடிப்படையில், இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டவில்லை. உரிய ஆய்வின் அடிப்படையிலும் இது மேற்கொள்ளப்படவில்லை.
இது இருமாவட்ட மக்களை மோதவிட்டுப்பார்க்கும் நிலையாகும். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதுள்ள மக்கள் அனைவரும், யாழ்ப்பாணத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து 1953, 1954ஆம் ஆண்டுகளில் வந்து குடியேறியோர் ஆவர். இந்த மக்களின் தொடர்புகள் அறுந்து போகவில்லை. யாழ்ப்பாணத்தைப் புறக்கணித்து விட்டு, கிளிநொச்சியைப் பராமரிப்பதோ, கிளிநொச்சியைப் புறக்கணித்து விட்டு, யாழ்ப்பாணத்தைப் பராமரிப்பதோ ஏற்புடையதல்ல; மக்கள் குடியேறிய காலப்பகுதியில், அப்போதிருந்த அதிகாரிகள் கண்ணுக்குப் புலப்படாத ஓப்பந்தங்களைச் செய்துள்ளனர். அதாவது, இரண்டு போகங்கள் பயிர் செய்ய முடியும்; அங்கே வசதி வாய்ப்புகளுடன் வாழமுடியும் போன்ற ஒப்பந்தங்களை, இப்போது மீறுதல் பிழையான விடயமாகும். இதைவிடுத்து, இந்தத் தலைமுறைகளை ஏமாற்ற முடியாது.
கே: யுத்தம் நிறைவுபெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ளன. வடக்கில் எந்தத் தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள், தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். இதற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா?
இலங்கையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்க் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சியின் தலைவர், அமைச்சராக இருந்தபோது, மூன்று தொழிற்சாலைகளை நிறுவினார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை போன்ற தொழிற்சாலைகளில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் 1950களில் வேலைவாய்ப்பைப்பெற்றனர்.
பிரபாகரன் தானாகத்தோன்றி, போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அரசியல் கட்சிகளால் தோற்றுவிக்கப்பட்டார். அதாவது, அமிர்தலிங்கத்துக்கு இரத்தத்தால் பொட்டிட்டு, 1976ஆம் ஆண்டுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு எல்லாவற்றையும் செய்துதான், இயக்கங்கள் வளர்க்கப்பட்டன. பிரபாகரன் போராட்டத்துக்கு வருவதற்குமுன், பல அறவழிப் போராட்டங்கள், ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. அனைத்துமே கிழித்தெறியப்பட்டன. இதற்குப் பின்னர் தான், பிரபாகரன் ஆயுதத்தைத் தூக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதற்குத் தென் பகுதி அரசியல் தான், வழி சமைத்துக் கொடுத்தது. இந்தியா அரைகுறை சமஷ்டியில் சந்தோசமாகவுள்ளது. ஒரு முழுநிலை சமஷ்டியில் சுவிட்சர்லாந்தும் கனடாவும் சந்தோசமாகவுள்ளன; இவ்வாறு பலநாடுகள் உள்ளன.
இலங்கை 96 சதவீதம் எழுத்தறிவைக் கொண்ட நாடாகக் காணப்படுகின்றது. இப்படியான எழுத்தறிவு கொண்ட நாட்டில், நாங்கள் ஏன் சின்னாபின்னப்பட வேண்டும்; ஒன்றைச் சிந்தித்திருந்தால் பிரபாகரனும் தோன்றியிருக்க மாட்டார்; ரோகண விஜயவீராவும் தோன்றியிருக்க மாட்டார். சிறுபான்மைச் சமூகங்கள் வாழக்கூடிய வழிவகைகள், பெரும்பான்மைச் சமூகங்களால் ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழ் மக்கள் எமக்கான ஆணையை வழங்கவேண்டும்; நான் கடந்த 10 வருடங்களில் பார்த்த அரசியல் தலைமை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான், சரியான தலைமை என்று ஆணித்தரமாக குறிப்பிடுகின்றேன். எமக்கு ஆணை தாருங்கள்; ஐந்து ஆண்டுகளில் செய்து காட்டுகின்றோம்.
கடந்த காலங்களில், அவர்களுக்கு வழங்கிய மக்கள் ஆணையை எமக்கு இம்முறை வழங்கிப் பாருங்கள்; இந்த ஐந்து வருடங்களில் உங்களுக்குச் சரிவரவில்லை என்றால், நிராகரியுங்கள்; ஆனால், எதிர்வரும் ஐந்து வருடங்களை, நாங்கள் எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்று பார்த்து, மக்கள் எங்களுடன் வருவார்கள்.
நீங்கள் தொடர்ந்து வாக்களித்தவர்கள், எதையும் செய்யாமல் மீண்டும் வருகின்றனர்; வாக்குக் கேட்கின்றனர். அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில், மக்கள் தாமாகத் தீர்மானித்துச் சரியானவர்களைத் தெரிவு செய்து, நாடாளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும். இதுதான் முறைமையாகும்.
-சுப்பிரமணியம் பாஸ்கரன்