ஆஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலையினால் தற்காலிக விசாக்களில் உள்ள 19,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் 14,000 பேர் வீடற்ற நிலைக்கு செல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் Bridging Visas எனப்படும் இணைப்பு விசாக்களில் உள்ளவர்களும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள அகதிகளும் வேலைகளை இழந்தால் அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் JobSeeker, JobKeeper பண உதவிகள் எதும் வழங்கப்படுவதில்லை.

2012ம் ஆண்டு ஈரானிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து தற்காலிக விசாவில் உள்ள அல்லஹாயரி, ஆஸ்திரேலியாவில் பெர்சிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் அகதிகள் பணியாற்றி வரும் நிலையில், இந்த மந்தநிலையினால் தன்னிடம் பணியாற்றிபவர்களுக்கான சம்பளத்தை கொடுக்க இயலவில்லை என்கிறார் அல்லஹாயரி.

குறைவான சம்பளம், பாதுகாப்பற்ற வேலையைக் கொண்டிருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது கொரோனா மந்தநிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதிகாரப்பூர்வ கணக்குகளில் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

கொரோனா மந்தநிலைக்கு முன்னதாக, தற்காலிக விசாக்களில் உள்ள 61,622 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.

“அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், தற்காலிக விசாக்களில் உள்ள 18,807 அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் கொரோனா மந்தநிலையில் வேலைகளை இழந்திருக்கின்றனர்,” ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது