எதிர்காலத்துக்கு வாக்களித்தல்?

தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”
– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க  எழுத்தாளர்

  

கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொண்டால்தான் பரிகார நீதியைக் கேட்கலாம்.

பரிகார நீதி என்றால் என்ன? இனப்படுகொலைக்கு எதிரான நீதியேது. இனப்பிரச்சினைக்கான பரிகாரம் அல்லது தீர்வு எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதிதான்  என்ற பொருளில் அது பரிகார நீதி என்று அழைக்கப்படுகிறது.

கூட்டமைப்பின் பேச்சாளர் இனப்படுகொலை என்பதனை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று சட்டத்தரணித் தனமாகப் பேசுகிறார்.பரிகார நீதி மட்டுமல்ல நிலைமாறு கால நீதியும் தூய நீதி அல்ல. அவை அரசியல் நீதிகள்தான். அரசுகளின் நீதிகள்தான். அரசுகளால் தீர்மானிக்கப்படும் நீதிகள்தான்.

பெருந் தமிழ்ப் பரப்பில் அதிக தொகையினர் கேட்பது பரிகார நீதியை. ஆனால் உலக சமூகமும் ஐநாவும் தமிழ்மக்களுக்குப் பரிந்துரைத்திருப்பது நிலை மாறுகால  நீதியை.

கூட்டமைப்பு கொள்கை அளவில் நிலைமாறுகால நீதியை  ஏற்றுக்கொண்டு விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த பொழுது அது ஐநா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதிக்காகானது. கூட்டமைப்பு ஐநாவின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதோடு அத்தீர்மானத்தின் பிரகாரம் அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு கால அவகாசங்களையும் ஏற்றுக்கொண்டது.

நிலைமாறு நீதியின் கீழான தீர்வுக்கான முயற்சிகளைத்தான் கூட்டமைப்பு தன்னுடைய அடைவு என்று நம்புகிறது. நிலைமாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்றாகிய மீள நிகழாமையின்  பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு சேர்ந்து உழைத்தது. மீள நிகழாமை எனப்படுவது ஒரு பிரச்சினைக்குக் காரணமாக இருந்த வேர்நிலைக்  காரணிகளை இனங்கண்டு அவை மறுபடியும் தலைதூக்க முடியாதபடிக்கு கட்டமைப்புசார் மாற்றங்களை செய்வது. இதன்படி இலங்கைத்தீவின் யாப்பை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் யாப்புக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்க வேண்டும்

இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் இனப்படுகொலைக்கு எதிரான நீதியிலிருந்து இனப்பிரச்சினைக்கான தீர்வு பிரிக்கப்படுகிறது.அவ்வாறு நீதியைக் கேட்டால் தீர்வைப் பெற முடியாது என்று சிங்கள் லிபரல்களே கூறுகிறார்கள்.குற்ற விசாரணையும் தீர்வும் இரண்டு தண்டவாளங்களைப் போன்றவை என்று ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ச கூறினார்.

நிலைமாறுகால நீதியின் பிரகாரம் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு ஓர் இடைக்கால வரைபுவரை நிலைமைகள் முன்னேறின. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் கவிழ்த்தத்ததோடு இடைக்கால அறிக்கையை இறுதியாக்கும் முயற்சிகள் இடை நிறுத்தப்பட்டன. மைத்திரிபால சிறிசேன நிலைமாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவர். அவர் ஆட்சியைக் கவிழ்த்ததும் நிலைமாறுகால நீதி அனாதையாகியது.

இப்பொழுது ராஜபக்சக்கள் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் சம்பந்தர் நம்புகிறார் அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் முன்னைய இடைக்கால அறிக்கையை தொடர்ந்து முன் நகர்த்தலாம் என்று. அது விடயத்தில் ஐநாவும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்றும் அவர் நம்புகிறார். அவருடைய தேர்தல்கால உரைகளில் அதை உணர முடியும்.

எனவே நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்ட  கூட்டமைப்பு பரிகார நீதி பொறுத்து அதிகம் நம்பிக்கையோடு இல்லை. அதுமட்டுமல்ல பரிகார நீதியை பெறுவதற்கான வழி முறைகளிலும் அவர்கள் நம்பிக்கையோடு இல்லை. கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் பரிகார நீதியைப் பெறுவதில் இருக்கக்கூடிய சட்டச் சிக்கல்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

அதாவது பரிகார நீதியை பெறுவதாக இருந்தால் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். விசாரிக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடு அல்ல. அதனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நிறுத்தமுடியாது. எனவே அதற்கென்று ஐநாவின் பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அங்கேயும் பிரச்சினை உண்டு. அரசாங்கத்திற்கு சார்பாக காணப்படும் சீனாவும் ரஷ்யாவும் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும்போது அந்தத் தீர்மானம் வெற்றி பெறாது.

எனவே அனைத்துல யதார்த்தத்தின்படியும் ஐநா யதார்த்ததின்படியும்  பரிகார நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கூட்டமைப்பு நம்புகின்றது. அதனால்தான் அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியை கோரி போராடப் போவதாக வாக்குறுதிகள் எதனையும் வழங்கவில்லை.

அதேசமயம் கூட்டமைப்புக்கு மாற்றாக போட்டியிடும் இரண்டு தரப்புக்களான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் பரிகார நீதியை நோக்கி தமது வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. இவ்விரண்டு கட்சிகளும் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்கின்றன. குறிப்பாக விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை நடந்தது என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். எனவே அவர் தன்னுடைய தீர்மானத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்த வேண்டும்.

மேற்படி இரண்டு கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளில் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக காணப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் கோரியுள்ளன.

அதோடு, பரிகார நீதியை பெறுவது சாத்தியமில்லை என்று கூறும் தரப்புக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் ஆங்காங்கே பதில் கூறி வரக் காணலாம். அவர்கள் ரோஹியங்யா முஸ்லிம்கள் தொடர்பில்  காம்பியா நாடு மேற்கொண்ட நகர்வைச்  சுட்டிக் காட்டுகிறார்கள். விசேஷ தீர்ப்பாயத்தை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறுகிறது.

ரோகியங்கா முஸ்லிம்களின் புவிசார் அரசியல் யதார்த்தம் வேறு. ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் யதார்த்தம் வேறு. அது தனியாக ஒரு கட்டுரையில் ஆராயப்பட வேண்டும். தவிர இக்கட்டுரையில் முன்பு கூறப்பட்டதை இங்கு திரும்பக் கூறலாம். நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் இரண்டுமே அரசுகளின் நீதிகள்தான். அரசுகள் எப்பொழுதும் நிலையான நலன்களின் அடிப்படையிலேயே சிந்திக்கும். அங்கே நீதி நியாயம் அறம் என்பவையெல்லாம் கிடையாது. அன்பு பாசம் காதல் என்பவையெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க நலன் சார் வர்த்தக-ராஜீய உறவுகள் தான். இந்த அடிப்படையில் அரசுகளை வெற்றிகரமாகக் கையாள்வதன் மூலம் மட்டுமே பரிகார நீதியோ அல்லது நிலைமாறுகால நீதியோ எதுவானாலும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய இறுதி இலக்கை அடைய முடியும்.

சம்பந்தர் கனவுகாணும் நிலைமாறுகால நீதிக்கூடாகக் கிடைக்ககூடிய  ஓர் அரசியல் தீர்வுக்கும் அதாவது மைத்திரியால் இடை நிறுத்தப்பட்ட யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைவை ராஜபக்சக்களின் புதிய நாடாளுமன்றத்தில் முன்னோக்கி நகர்த்துவது என்றால் அதற்கும் ஐ,நா. மேற்கு நாடுகள் இந்தியா போன்றவற்றின் அழுத்தப் பிரயோகம் வேண்டும்.  அரசாங்கத்தின் மீது நிர்ணயகரமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே ராஜபக்சக்கள் குறைந்தது ஒரு தீர்வற்ற தீர்வுக்காவது இறங்கி வருவார்கள்.அதனால்தான் சம்பந்தர் சர்வதேசம் எம்பின்னால் நிற்கிறது. இந்தியா நிற்கிறது. என்று கூறவேண்டியிருகிறது.

எனவே நிலைமாறுகால நீதியின் விடயத்திலும் அரசுகளின் அழுத்தம் அவசியம். அதுதான் நான் இங்கே சொல்ல வருவது. நிலைமாறுகால நீதியோ அல்லது பரிகார நீதியோ எதுவானாலும் அது அரசுகளின் தீர்மானம்தான். அரசுகளின் அழுத்தம்தான்.

எனவே ஈழத் தமிழர்களுக்கான இறுதி நீதி எனப்படுவது தூய நீதி அல்ல. அதை அரசுகள்தான் தீர்மானிக்கும்.

ஆயின் அரசற்ற தரப்பாபாகிய ஈழத்தமிழர்கள் எப்படி அரசுகளை வெற்றிகரமாகக் கையாள்வது?

அதற்குரிய முதல் முக்கிய நிபந்தனைதான் மக்கள் ஆணையைப் பெறுவது. மக்கள் அதிகாரத்தை பெறுவது. தேர்தல்களில் பரிகார நீதியை கோரும் தரப்புக்கள் மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி பெற வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் பரிகார நீதி குறித்துப் பேசும் பொழுது உலகம் அதைச்  செவிமடுக்கும். எனவே பரிகார நீதியைக் கோரும் தரப்புக்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி முதலாவது கட்டம்.

அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்துக்கு வெளியே வெகுஜன போராட்டங்களையும் ராஜியக் கட்டமைப்புகளையும் கட்டியெழுப்ப வேண்டும். இவற்றைச் செய்வதென்றால் முதலில் மாற்றுத்  தரப்புக்கள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பைத்  தோற்கடிக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தேர்தல் கள நிலவரங்களின் படி அவ்வாறு கூட்டமைப்பை மாற்று அணி முழுமையாகத் தோற்கடிக்க கூடிய நிலைமைகள் குறைவாகவே காணப்படுகின்றன.

மிகக் குறிப்பாக மாற்று அணிகள் வடக்கு மையமாகவே காணப்படுகின்றன. அல்லது வேண்டுமானால் அவை வடக்கில்தான் பலமாகக் காணப்படுகின்றன என்று கூறலாம். அவை கிழக்கில் பலமாக  கால் ஊன்றவில்லை. வடக்கு கிழக்கு இரண்டு பகுதிகளிலும் பரவிக் காணப்படுவது கூட்டமைப்பு மட்டும்தான். இதுவே மாற்று அணியின் மிகப் பெரிய பலவீனம். எனவே மாற்று அணிக்கு கிழக்கில் மக்கள் ஆணையைப் பெற்றுக் காட்ட வேண்டும். தமிழர் தாயகம் முழுவதுக்குமான ஒரு மக்கள் ஆணையை மாற்று அணி பெற்றால்தான் கூட்டமைப்பின் முதன்மை கேள்விக்குள்ளாகும்.

இரண்டாவது பலவீனம் உண்மையான மாற்று அணி யார் என்பதிலேயே போட்டி நிலவுகிறது. மாற்று அணியை சேர்ந்த இரண்டு கட்சிகளும் ஒன்று மற்றதை மாறிமாறி விமர்சிக்கின்றன. இது வாக்காளர்களைச்  சலிப்படையச் செய்யக் கூடியது. வாக்காளர்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமான கூட்டுக்களை கண்டு கவரப்படுவார்கள். ஆனால் அப்படி ஒரு கூட்டை உருவாக்க மாற்று அணியால் முடியவில்லை.

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உண்டு. ஆனால் வாக்காளர்கள் மத்தியில் கூட்டு உற்சாகத்தைக் காண முடியவில்லை. இந்நிலையில் ஒரு வாக்களிப்பு அலையை கூட்டமைப்பாலோ அல்லது  மாற்று அணியாலோ  உற்பத்தி செய்ய முடியுமா?

இது மிகப் பரிதாபகரமான ஒரு நிலைமை.  கூட்டமைப்பையும் முழுமையாக தோற்கடிக்க முடியாது. மாற்று அணியும் முழுமையாக வெற்றி பெறப்போவதில்லை என்பது. அப்படி என்றால் தமிழ் மக்களின் அரசியல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலைமாறுகால நீதிக்கும் பரிகார நீதிக்கும் இடையே தத்தளிக்கப் போகிறதா ? தமிழ்மக்கள் தமது எதிர்காலத்துக்கென்று தீர்மானித்து வாக்களிப்பார்களா? ஒரு கிறீஸ்தவ மதகுரு கேட்டது போல “குறைந்தது நெருப்பை அணையவிடாமல் பாதுகாப்பதற்காவது” வாக்களிப்பார்களா?

நிலாந்தன்