மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி விட்டு தேர்தலுக்குப் பின் அதற்கு நேரெதிராக தான் செயற்பட்டார்கள். இதுதான் வரலாறு.
இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாடாளுமன்றில் இருக்க கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் அதற்குப் பிறகு இந்த தீவில் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது என்கிற பேச்சுக்கும் இடமில்லாமல் போகும்.
இந்த தேர்தல் தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் தேர்தல். தமிழ்மக்கள் கடந்த 72 வருடங்களாக எந்தெந்த கொள்கைகளுக்காக எந்தெந்த உரிமைகளுக்காக பாடுபட்டோமோ அதனை நாம் தொடர்ந்தும் அடையும் வரைக்கும் பாடுபடப் போகின்றோமா. இல்லாவிடில் முற்றுமுழுதாக எங்கள் கொள்கைகளையும் உரிமைகளையும் கைவிடப் போகின்றோமா. இது தான் இன்றைய தேர்தல்.
கோத்தபாய ராஜபக்ச கொண்டு வரும் அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி ஆதரவு வழங்க தயாரெனெ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகவே கூறியுள்ளது.
52 நாள் குழப்பம் நடைபெற்ற போது தங்களை ஆதரியுங்கள் தாங்கள் அந்த இடைக்கால அறிக்கையை ஆதரிப்பதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தனிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார். இதுதான் இந்த தேர்தலுக்குப் பிறகு நடைபெற இருக்கின்றது.
ஆகவே இந்த இனத்தின் எதிர்காலம், உரிமைகள் அனைத்தையும் எம் மக்கள் வரும் ஐந்தாம் திகதி தீர்மானிக்கப் போகிறார்கள்.
எனது தாழ்மையான வேண்டுகோள். கடந்த 10 வருடங்களாக ஏமாற்றம் போதும். தமிழ்மக்கள் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு நேர்மையாக பாடுபடும் அரசியல் தலைமைத்துவத்தை ஆதரிக்க வேண்டும். கடந்த பத்துவருடங்களாக தன்னை நிரூபித்த தலைமைத்துவமாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு இடத்திலும் பதவியாசைக்காக தங்கள் கொள்கைகளை கைவிட்டுச் சென்ற தலைமைத்துவமாக இருக்கக் கூடாது. அப்படி ஒரு தேடலை எமது மக்கள் செய்தால் அந்த தலைமைத்துவம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக மட்டும் தான் இருக்கலாம்.
Eelamurasu Australia Online News Portal