மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள வாலிபர் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.
மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் பார்த்த அவர், கையிலிருந்த சிகப்பு பையை தூக்கிப் பிடித்தபடி அரைமணி நேரம் ஓடியிருக்கிறார். ஆபத்தைப் புரிந்து கொண்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.
டிரைவராக பணிபுரிந்துவந்த அனுஜித். லாக்டெளன் காரணமாக கொட்டாரக்கரையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக பணி செய்து வந்திருக்கிறார். இந்த மாதம் 14-ஆம் தேதி பைக்கில் சென்றபோது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜித் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உறுப்பு தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவே, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அனுஜித்தின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கை எலும்புகள், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகள் எட்டு பேருக்குப் பொருத்தப்பட்டன. உயிருடன் இருந்தபோது ரயிலில் இருந்த நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர், இறந்தும் 8 பேரின் வாழ்வில் இருக்கிறார். அனுஜித் வாழ்வார். அனுஜித்தை கேரளா தலையில் வைத்து பெருமையுடன் போற்றுகிறது.