சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம் மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டார்களா? பதிலானது இல்லை என்றுதான் கூற வல்ல தகமைகளை அவர்கள் கொண்டுள்ளனர்.

ஆயுதப் போராட்டத்தினால் முன்னகர்த்தப்பட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சுயநிர்ண உரிமையுடன் கூடிய சுயாட்சி வரைபை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதை விடுத்து, பல சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக அரசியலில் ஈடுபட்டு இன்று ஆயுதப்போராட்டத்திற்கு முந்தைய நிலையை தேர்வு செய்யப்பட்ட தலைமைகள் அடைந்துள்ளனர்.

சர்வதேசத்துடன் தம்மைத் தேர்ந்து எடுத்த மக்களுக்காக அரசியல் செய்ய அனுப்பப்பட்டவர்கள், மாறாக அந்நிய சக்திகளை தமது எஜமானார்களாக வரிந்து கொண்டு, தம்மைத் தேர்ந்து எடுத்த மக்களிடம் வந்து அரசியல் செய்கின்றனர். இந்த அவலம் தொடர வேண்டுமா? மீளாய்வு செய்து முடிவெடுத்துச் செயற்படுத்த இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன.

அரசியல் தீர்வு என்ற நோக்கம் இவ்வாறு கடத்தப்பட்டுச் செல்கின்றது என்றால் நீதிக்கான தேடல் எங்கே நிற்கின்றது? எமது நீதிக்குரிய தடத்தை, நாம் சரியாக அமைத்துக்கொண்டு சென்றோமேயானால் அதுவே அரசியல் தீர்வுக்கும் பல கதவுகளைத் தானாக திறந்து விடும். இதனைக் கையாள வல்ல பிரதிநிதிகளின் தேர்வே இன்றைய காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. இதனையே நாம் தீவிரமாக ஆய்ந்து தெளிவுற வேண்டும்.

நீதிக்கான தேடல் எனும் போதே அது இலங்கைத் தீவினுக்குள் ஒடுக்கப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது என்பதும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக வேண்டும். இந்த இலங்கைத் தீவானது நீதி நியாங்களின் பிரகாரம் ஆளப்பட்டிருந்தால், எமக்கான உரிமைப் போராட்டமே எழ வாய்ப்பு இருந்திருக்காது. சரி சிங்கள தேசம் அதற்கான விலையைக் கொடுத்து தமது தவறுகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக உள்ளனரா? இந்த சிங்கள பெளத்த பேரினவாதம் தம்மைத் தாம் மீளாய்வு செய்தவர்களாக புரிந்துணர்வுக்கு உட்பட்டிருக்கின்றார்களா? அவ்வாறு அவர்கள் இருந்திருந்தால், அவர்களுக்கு இந்த ஒரு சதாப்தம் தேவைக்கும் அதிகமானதேயாகும். சிங்கள தேசத்திற்கு நாம் தேவைக்கு அதிகமான நேரத்தை வழங்குவதால் நாம் அடைகின்ற துன்பங்கள் கொஞ்சமா? இதனை நாம் தீவிரமாகவே எம்மை நோக்கி நாமே கேட்க வேண்டும்.

அவ்வாறு நாம், எம்மைக் கேள்விக்கு உட்படுத்தும் போது ஒரு வாக்களிப்பாளராக நாம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் நீதிக்கான தேடலுக்கு உறுதுணையாகின்றோமா? அல்லது ஊறுவிளைவிக்கின்றோமா?  என்ற தெளிவைப் பெறலாம். நீதிக்கான தேடல் சர்வதேச அரங்கில் முன் வைக்கின்ற போது இராஜதந்திரிகளின் கேபிள் தொடர்பாடல்களையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இந்த கேபிள் தொடர்பாடல்களை நாம் அரசியல் கட்சிகளின் சமரச அரசியல் போல கருதிச் செயற்பட முடியாது. அவை இராஜதந்திரிகளின் நகர்வுகளில் தீவிரமான வகிபாகங்களை ஆற்றும் தகவற் களஞ்சிமாகும்.

நாம் எமது பிரதிநிதிகளாக விநாயகமூர்த்தி முரளிரனையோ, சிவநேசதுரை சந்திரகாந்தனையோ, தர்மலிங்கம் சித்தார்த்தனையோ, டக்கிளஸ் தேவானந்தாவையோ அன்றி இந்திய, இலங்கைப் படைகளுடன் இணைந்து குற்றமிழைத்தவர்களாக கேபிள்களில் குறிப்பிடப்படும் TELO, ENDLF, EPRLF என்ற நாமங்களின் கீழ் வரும் நபர்களையோ தேர்ந்துவிட்டு, சர்வதேச இராஜதந்திரிகளிடம் நீதிக்காக போய் நின்றால்…………

எமது நீதிக்கான தேடலின் உண்மைத் தன்மை கேள்விக்கு உள்ளாகின்றது. மேற்கூறிய நபர்களும் அவர்களின் அமைப்புக்களும் மனித உரிமை மீறல்களிலும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளிலும் பங்காற்றியவர்களாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஐக்கியநாடுகள் சாசனத்தின் கீழ் ஒரு அரசு செய்ய முடியாத காரியங்களை சிங்கள, இந்திய தரப்புக்கள் இவர்களை வைத்துச் செய்ததாக வேறு அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதற்காக சிங்கள, இந்திய தரப்புக்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என்று அர்த்தமாகிவிடாது. இப்போது கூறுங்கள் மக்களே, வாக்களிக்கும் எமது உரிமையை நாம் கடந்த கால தேர்தல்களில் நீதிக்கான தேடலுக்காக அர்ப்பணிப்புடன் அவதானமாக கையாண்டோமா? இனி வரப்போகும் தேர்தலில் இவ்விதமான அர்பணிப்புக்கு எம்மைத் தயார்ப்படுத்தி வைத்துள்ளோமா? சற்று நின்று நிறுத்தி நிதானியுங்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமும், அவலமும் இன்னும் எவ்வளவு காலங்களுக்கு தொடர வேண்டும் என்று கடந்து செல்லப்போகிறோம்? இதுவரை எத்தனை உயிர்கள் தம்பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே ஆவி துடிக்க இந்த உலகை விட்டகன்றுள்ளன? இன்னும் எத்தனை பேர் இப்படி பரிதவிப்புடன் மரணிக்க அனுமதிக்கப் போகின்றோம்? வாக்காளர்களாக எங்கள் கரங்களிலும் இவர்களின் கண்ணீருக்கான காரணங்களும் படிந்துள்ளன. இதை உணர்ந்து எப்படிச் செயற்படப்போகின்றோம்? போதும் இந்த அவலம். நீதிக்கான கால அவகாசத்தை எங்களால் இயன்ற மட்டிலாவது குறுகுவதற்கு எங்கள் வாக்குகளை சரியாக பயன்படுத்த திடசங்கம் பூணுவோமாக. பிழையான தேர்வுகளால் எங்கள் கரங்களிலும் குற்றம் இளைத்தவர்களின் கரங்களில் உள்ள இரத்தக் கறையை ஏந்திவிட வேண்டாம். எம்மக்களின் கண்ணீருக்கும், மண்வாரி எறிந்து ஏங்கிநிற்கும் குமுறலுக்கும் எங்களால் ஆன கடமையை செய்ய முன் வாருவோம்.

இவ்வாறு நாம் எண்ணுகின்ற போது எங்களிடம் பல கேள்விகள் எழுவதும் யதார்த்தமே. நாம் இங்கு யாரையும் பகைக்க வேண்டிய தேவை அறவே இல்லை. எமது கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் அறம் சார்ந்து ஒலிக்க வேண்டுமாகில் எமக்கு வேறு வழி இல்லவே இல்லை. மேற்கூறிய தரப்பினர் அனைவரும் எமது விடுதலைக்காகவே ஆயுதத்தை முதல் முதலில் தம்முடன் வரிந்து கொண்டனர். அதனை நாம் மதிக்கின்றோம். அந்த ஆயுதங்கள் என்று அந்நிய நிகழ்ச்சி நிரல்களுக்காக எம்மை நோக்கித் திரும்பினவோ, அன்றே நாம் வழங்கிய உணர்வு ரீதியிலான ஆதரவை அவர்கள் கேள்விக்கு உட்படுத்திவிட்டனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு இன்று பல காரணங்கள் கற்பிக்கப்படலாம். வியாக்கியாஞனங்கள் முன் வைக்கப்படலாம், அதற்கும் இன்றைய நாட்களில் பஞ்சமில்லை.

எது எவ்வாறாக இருப்பினும் 80களில் தமிழீழ தேசியத் தலைவருடன் பாலகுமார் அண்ணா இணைத்த கரம் முள்ளிவாய்க்கால் வரை விலகாது பயணித்து வரலாற்றுக் கடமையின் தீவிரமான அர்பணிப்பை நிலைநிறுத்தி சான்று பகர்கின்றது. இதே போல பல அமைப்புக்களில் இருந்து வந்து அர்பணிப்புடன் தாயக விடுதலைக்காக களமாடி விதைந்த போராளிகளின் வரலாறும் எம் மண்ணில் பதிந்தே கிடக்கின்றன.

அந்நிய நிகழ்ச்சி நிரல்களின் கீழ் இயங்கியவர்களை நாம் மறப்போம் மன்னிப்போம் என்று கடந்து வர முட்பட்டிருந்தாலும் அவர்களை எமது பிரதிநிதிகளாக கொள்வதால் எமக்கு பாதகமே மிஞ்சி நிற்கின்றது. இவர்களை நாம் எமது பிரதிநிதிகளாக கொள்வதே சர்வதேச அரங்கில் சிங்கள தரப்பின் நலன்களை பேணவே வழி வகுக்கும். அவ்வாரான விளைவையே இவர்களின் பிரதிநிதித்துவம் எற்படுத்துகின்றது. இவர்கள் அன்று ஏந்திய ஆயுதங்களை எம்மீது திருப்பியதற்கு ஓப்பான கைங்கரியத்தையே இன்றும் ஜனநாயகம் என்னும் மேற்பரப்பிலும் அறிந்தும் அறியாமலும் செய்கின்றார்கள் எனலாம். இதனை இவர்களாக உணர்ந்து விலகி இருந்திருக்க வேண்டும் அதுவே அறமாகவும் அமைந்திருக்கும். இவர்கள் தாம் மக்களுக்கு ஏதோ செய்யப் போவதாக வந்து நிற்கின்றனர். உண்மையாகவே அலசி ஆராய்ந்தால் இவர்களின் பிரசன்னம் அந்நிய நிகழ்ச்சி நிரல்களின் நீட்ச்சியாகவே அமைகின்றது. இதில் நாம் தெளிவாக வேண்டிவர்களாக உள்ளோம்.

இது மட்டுமா? இவற்றை சற்றே தள்ளி வைத்துவிட்டு நாம் தெரிவு செய்கின்ற எமது பிரதிநிதிகளின் வயதைக் கூட நாம் கருத்தில் எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல எல்லாவற்றுக்கும் பாகுபாடு அற்ற சமவுரிமையை வழங்கும் தோற்றப்பாடு உள்ள உலகில் இராஜதந்திர வட்டாரத்தில் கூட குறித்த வயது எல்லையைக் கடந்தவர் சொற்களுக்கு வலு இருப்பதில்லை.

இது ஓர் கசப்பான உண்மை என்பதை நாம் ஏற்றேயாக வேண்டும். அது எந்தப் பெரிய ஆளுமை என்று நிரூபித்தவராகவும் இருக்கலாம் அவருக்கும் இதுதான் கதி. இது எழுதப்படாத விதிமுறையாகவே இராஜதந்திர உலகில் உள்ளது. எனவே மக்களாகிய நாம் எமது பிரதிநிதியாக தெரிபவர்களின் வயதையும் கருத்தில் எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

கடந்த கால தவறுகளுக்கு இதுவும் ஓர் காரணியாக உள்ளது. அதனாலேயே சம்பந்தர் தன்னால் ஆகாத கரியத்தை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என்று கூறுவதற்கு காரணமாகவும் உள்ளது. இதனை இந்தியா தனக்கு வாய்ப்பான முதலீடாகவும் கருதிக் கொண்டது. அதற்காக நாங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக போகவேண்டும் என்றும் இங்கே மொழிபெயர்க்கக் கூடாது. எமது நலன்களுக்கும் எமது மக்களின் நீதிக்கும் பங்கமில்லாதவாறு இந்தியா தனது நலன்களைத் நிலைநிறுத்திக் கொள்ளட்டும். அதற்கு பங்கமில்லாது நாம் இருப்பதில் எமக்கு ஆட்சேபனையும் இருக்காது அல்லவா?

இப்போது நாம் அர்ப்பணிப்புடன் உண்மையாகவே நீதியை தேடவல்ல தலைமைகளை உருவாக்கக் கூடிய தெளிவுக்கு வரலாம். வயானவர்களுக்கு நாமும் கட்டாய ஓய்வு வழங்க இங்கே கடமைப்பட்டுள்ளோம். அவர்களை எமது புள்ளடி இடும் பட்டியலில் இருந்து முதலில் அகற்றிவிடுவோம். அடுத்ததாக சர்வதேச இராஜதந்திரிகளின் ராடரில் வீழ்ந்து மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கருதப்படுவோரையும் அகற்றிவிடுங்கள்.

இனி கடந்த காலத் தேர்தலில் மருதனாமடத்தில் வைத்து சந்தையில் வியாபாரமாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இப்போது நினைவுக்கு கொண்டு வருவோம். அன்று அவர்கள் மக்களிடம் முன்வைத்தவை என்ன? அவற்கான ஆணையை வழங்கிய எங்கள் வாக்குகளுக்கு நிகழ்ந்தது என்ன? எமது ஆணையை “யானை” எப்படி சுழித்து ஒற்றையாட்சிக்குள், வடக்குக்கிழக்கு இணையாத அலகின் கீழ் எமது மரபுவழித் தாயகத்தை சிதைத்து அழித்து சிங்கள பெளத்தத்துக்கு முன்னுரிமையை வழங்கி எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இவற்றை நாம் சும்மா கடந்து செல்ல முடியாது. ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட தமக்கே உரிய கலை கலாச்சாரத்துடன் சுயநிர்ணய உரிமையுடன் தன்னாட்சியை தக்கவைத்துள்ள தகமைகளை தகர்த்தழிக்கும் தந்திரத்தின் கீழ் செயற்படும் தலைமையை இனம் காணுவோம். இவர்களை இதற்கு மேலும் எமக்கான முடிவுகளை எடுக்கும் நிலையில் இந்த இனம் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. இவர்களையும் எங்கள் பட்டியலில் இருந்து அகற்றுவோம்.

இத்தகையவற்றை ஆய்ந்து அறிந்து அகற்றி நாம் மீளாய்வு செய்தவர்களாக இருப்போமாயின், நாம் இந்தத் தேர்தலில் தெளிவான முடிவுடன் வாக்களிக்கலாம். எங்கள் மக்களின் கண்ணீருக்கும், இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் நீதி வேண்டி சர்வதேச அரங்கில், எமக்காக அரசியல் செய்ய வல்ல தகமை உடையவர்களை தெரிவு செய்யும் தெளிவைப் பெறுகின்றோம். மேற்கூறியவர்களை நூறு விகிதம் புறந்தள்ளிய தெரிவு இப்போது எங்களின் கண்ணில் சொல்லாமலே தென்படுகின்றதல்லவா? அந்த சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்.

அரசியலில் கற்றுத் தேர்ந்து தெளிந்த அவர்கள் செயலாற்றுவார்கள். சந்தர்ப்பத்தை வழங்கிக் காலம் இட்ட கட்டளையை நிறைவேற்றுவோமாக.சிங்கள தேசத்தின் கறைபடிந்த நிகழ்ச்சி நிரலை சர்வதேசத்தின் முன்னிலையில் சிதறடித்து அர்பணிப்புள்ள நீதிக்கான தேடலை உண்மையாகவே நாடும் சமூகமாக நிமிந்து எழுவோமாக!

சீராளன்