பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி

பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது என்றும், வாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் நாடு திரும்புவதற்கு அடம்பிடிக்கும் ப்ரியா நடேசன் குடும்பத்தினால் நாட்டு மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியா ; நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி அவ்வளவு  பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து அந்தக்குடும்பத்தினை எப்படியாவது நாட்டைவிட்டு துரத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருபவர் பீற்றர் டட்டனே தவிர அந்தப்பேரிடருக்கு காரணமானவர்கள் வேறு யாருமல்லர் என்று Carina Ford கூறியுள்ளார்.

மேலும் ப்ரியா நடேசன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்கு பிழையான உதாரணமுடைய பெற்றோராகிவிடக்கூடாது என்றும் அண்மையில் சிட்னி வானொலியொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பீற்றர் டட்டன் கூறியிருந்தார்.

ஆனால் அந்தக்குழந்தைகளை நாட்டுக்குள் வரவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கான உத்தரவை கொடுத்துள்ள நபர், அந்தக்குழந்தைகளின் பெற்றோரின் மீது அந்தப்பழியை சுமத்துவது அடிப்படையில்லாதது என்று Carina Ford தெரிவித்திருக்கிறார்.

யாருமே இல்லாத கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாம் ஒன்றினை இந்தக்குடும்பத்தினை தடுத்துவைப்பதற்காக நாளொன்றுக்கு 20 ஆயிரம் டொலர்கள் செலவில் நிர்வகித்துவருவது யார், எதற்கு போன்ற கேள்விகளின் ஊடாக பீற்றர் டட்டனின் கேள்விகளுக்கு விடை தேடிக்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.