அறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம்

பொதுவாக ஒரு தொழிலை, ஒருவர் மேற்கொள்வதாயின் அது தொடர்பிலான கல்வி அறிவு, ஆளுமை போன்றவை முதன்மையானவை. உதாரணமாக, மருத்துவராகப் பணியாற்றுவதாயின் அது தொடர்பிலான மருத்துவக் கற்கை நெறியைப் பயின்று பூர்த்தி செய்திருப்பதுடன் நோயாளிகள், தாதியருடன் நீடித்த சுமூக உறவைப் பேணும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும்.

அண்ணளவாக 40 ஆண்டுகளுக்கு முன்பு, சட்டவல்லுநர்களே நமதுநாட்டில் அரசியல் செய்தார்கள். ஆனால் இன்று, கல்வித் துறை சார்ந்த புலமை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, எல்லோரும் செய்யக் கூடிய தொழிலாக அரசியல் மாறி விட்டது.

இலங்கை நாடாளுமன்றில் உள்ள மொத்த ஆசனங்களில் 196 ஆசனங்களே, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களுக்காக உள்ளன. மிகுதியாக உள்ள 29 ஆசனங்கள், துறை சார்ந்த வல்லுநர்களுக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டவை. ஆனால் இன்று, இந்த 29 ஆசனங்களில் கணிசமானவை கூட, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பங்கீடு செய்யப்படுகின்ற நிலைவரங்கள் உள்ளன.

இந்நிலையில், வழமைக்கு மாறாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதிக கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியில் உள்ளன. இந்த நாடாளுமன்றப் பதவிகளால், நாடு ஆள முடியாது என்றே, 80களில் தமிழினம் ஆயுதம் ஏந்தியது; அல்லது, ஆயுதம் ஏந்துவதற்கு உந்தப்பட்டது.

ஆனால், ஆயுத பலம் மௌனிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழலில், தெற்கில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும், இனப்பிணக்குத் தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கட்டாயம் தேவைப்படுகின்றது.  ஆனாலும், அந்தப் பதவி, தமிழ் மக்களுக்கு கூட்டாகத் தேவையே தவிர, தனியன்களாக அல்ல என்பதைத் தமிழ்க் கட்சிகள் உணராமையே, தமிழ் மக்களது ஆதங்கம் ஆகும்.

கொடும் போர், தமிழ் மக்களது பொருளாதாரத்தையும் பண்பாட்டையும் குடும்பங்களையும் மனங்களையும் சீரழித்து விட்டது. இவ்வாறாகத் தமிழ்க் கட்சிகளிடையே பொதுநோக்கம் கருதிய ஒற்றுமை, சீரழிந்தும் சிதைந்தும் போக, சிங்களப் பெருந்தேசியக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் தேர்தல் கடை விரித்துள்ளன.

1948ஆம் ஆண்டு தொடக்கம், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மாறிமாறி, தமிழ் மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்திருந்தன. தமிழ் மக்களுக்குக் கூடுதல் நெருக்கடி யார் கொடுக்கின்றார்களோ, அவர்களைச் சிங்கள மக்கள் தெரிவு செய்து, ஆட்சி பீடத்துக்கு அனுப்பி அழகு பார்த்தார்கள்.

அதனது தொடர்ச்சியாக, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியினதும் ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் நிழல்கட்சிகளே ஆகும்.

எவர் எதைச் சொன்னாலும், தமிழ் மக்கள் இன்று அனுபவித்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும், இன்றுவரை ஆட்சியில் இருந்த பேரினவாதக் கட்சிகளே காரணம் ஆகும். அவர்கள், ஒற்றையாட்சியும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் என்ற மேலாண்மையிலிருந்து ஒருபோதும் படி இறங்கி வரப்போவதில்லை.

இதற்கிடையே, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கூட, பௌத்த மதத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்பது, ஏனைய மதங்களுக்கு இரண்டாம் நிலை என்பதையே சுட்டி நிற்கின்றது.

ஆகவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியோ, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோ, ராஜபக்‌ஷக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுனவோ, சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, ஒற்றை ஆட்சியையும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற நிலையிலிருந்து, அவர்களாக விரும்பினாலும் விலக முடியாத நிலைவரமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பேரினவாதக் கட்சிகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், அபிவிருத்தியையே பேசுபொருளாகப் பேசுகின்றனர். ஏனெனில், அவர்கள் தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பில் கதைப்பது, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல. வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் போருக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில் கண்ட அபிவிருத்தி என்பது கடுகளவே.

ஆனால், அந்த அபிவிருத்தி ஏற்படாமைக்குக் கூட, கூட்டமைப்பே காரணம் எனக் கூச்சல் கூக்குரல் இடுவதே கண்டனத்துக்கு உரியது ஆகும். கூட்டமைப்பு, தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களுக்கே, அதிக முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட்டு வந்துள்ளது; வருகின்றது. ஆனால், அதற்காக அபிவிருத்திக்குக் குறுக்கே நிற்க வேண்டிய தேவை, கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை.

ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, அமைச்சராக, பிரதி அமைச்சராக, இராஜாங்க அமைச்சராக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பேரினவாதம், தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த பலர் பதவி வகித்து உள்ளனர். ஆனால், அவர்களால் அபிவிருத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததா, பெயர் குறிப்பிட்டுக் கூறும்படியாக, தொழிற்சாலைகளை நிர்மாணிக்க முடிந்ததா, ஏன், முன்னர் இயங்கு நிலையிலிருந்த தொழிற்சாலைகளை, மீள இயங்க வைக்க முடிந்தா?

தமிழர் பிரதேசங்களில், தமிழ் மக்களது கடற்றொழிலுக்குத் தடையாக இருக்கின்ற சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையின மீனவர்களை வெளியேற்ற முடிந்ததா?

தமிழர் பிரதேசங்களில், தமிழ் மக்களது பூர்வீகக் காணிகளைக் கபளீகரம் செய்து, அவர்களது கண் முன்னே நெல்மணிளை அறுவடை செய்து, தங்களது பொருளாதாரத்தை உயர்த்துகின்ற பெரும்பான்மையின விவசாயிகளிடமிருந்து எம் காணிகளை மீட்க முடிந்ததா? இப்படியே பட்டியலை நீட்டிக் கொண்டு போகலாம்.

ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமெனின், அதனது நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு என்பவற்றைச் சிதைக்க வேண்டும். அந்தவகையில், தமிழ் மக்களது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு நோக்கி நகருவதை, எக்காலத்திலும் பேரினவாதம் விரும்பப் போவதில்லை.

விடுதலைக்காகப் போராடும் இனம், வாய்க்கும் வயிற்றுக்கும் நேரத்தைச் செலவிட்டால், அடுத்த விடயங்கள் தொடர்பில் சிந்திக்க மாட்டார்கள் என்ற சித்தாந்தம், அடக்குமுறையாளர்களிடம் எப்போதும் உண்டு. அது பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்கும் பொருந்தும்.

இந்நிலையில், உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, அபிவிருத்தியுடன் கூடிய உரிமை என்ற அழ(ழு)கிய கோசங்களுடன் பல பேரினவாதக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் பவனி வருகின்றார்கள்.

இது ஒருவிதத்தில் சரி எனப்பட்டாலும், எங்களது உரிமைகள் கிடைக்கின்ற போது, எங்களது பொருளாதாரம் தொடர்பில் நாங்களே திட்டமிடலாம் அல்லவா, நாங்களே செயற்படுத்தலாம் அல்லவா?

எனவே, பேரினவாதக் கட்சிகளில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போட்டியிடுபவர்கள் அங்குள்ள தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் வல்லவர்களாக இருக்கலாம்; நல்லவர்களாக இருக்கலாம்; எங்களது ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம்; எங்களுக்குத் தெரிந்தவராக இருக்கலாம்; எங்களை அறிந்தவராக இருக்கலாம்.

ஆனால், அதற்காக அவருக்கு வாக்களிக்க முன், ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்குத் தமிழ் மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்காலும் அவர் தெரிவு செய்யப்படாது விட்டாலும், இது, அவர்களது கட்சி, தேசிய ரீதியில் பெறும்  ஒட்டு மொத்த வாக்கையும் அதிகரிக்க உதவும். இது அந்தக் கட்சியினது தேசியப் பட்டியல் அங்கத்தவர்களை அதிகரிக்கும்.

அடுத்து, தேசியக் கட்சிகள் தங்களது நலன் சார்ந்து, தேசிய ரீதியில் நாடாளுமன்றில் முடிவுகள் எடுக்கின்ற வேளையில், அதில் இருக்கின்ற நம்மவர், அதற்கு மனதளவில் உடன்படாவிட்டாலும், தான் சார்ந்த கட்சி என்ற அடிப்படையில் உடன்பட வேண்டி வரும்.

இதற்கு மேலதிகமாக, தமிழினத்துடன் இன்றுவரை வீணே, தேவையற்று மல்லுக்கட்டி வருகின்ற கட்சியில், நாம் இதுவரை இருந்து சாதித்தது என்ன, இனிச் சாதிக்கப் போவது என்ன, சாதிக்க விரும்பினாலும் பேரினவாதம் சற்றேனும் அனுமதிக்குமா?

இது வரையிலான காலமும், அரசியல் தீர்வுத்திட்டங்கள் தோல்வி அடைவதற்குக் காரணம், தமிழ்க் கட்சிகள் அல்ல. மாறாக, தமிழர்களது உரிமைகளை இம்மியளவேனும் தரமறுக்கும், சிங்களப் பேரினவாதக் கட்சிகளே ஆகும்.

ஆனால், இனிவரும் காலங்களிலும் தமிழர் தரப்பும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீர்வு காணும் பொருட்டு, அவர்களுடனேயே பேச்சுகளில் ஈடுபட வேண்டும். இதுவே யதார்த்தம்; இதுவே களநிலைவரம்.

அதற்கு நாம் எம்மை வளப்படுத்த வேண்டும்; வலுப்படுத்த வேண்டும். மாறாக, எமக்குத் துன்பம் தந்தவர்களையே நாம் வலுப்படுத்தலாமா? சற்றுச் சிந்திப்போம்; சலிக்காமல் எம்மவர்களுக்கு வாக்களிப்போம்.

காரை துர்க்கா