கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துபோனது. வயதானவர்களுக்குத்தானே கொரோனா அதிகமாக பாதிக்கிறது என்பதால், அமிதாப்புக்கு கொரோனா என்றதும் அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர்.
ஆனால் அமிதாப்பச்சன் வயது 77 என்றாலும் அதை வெறும் எண்ணாக பார்ப்பவர். அதனால்தான் தைரியமாக அவரால் கொரோனாவை இன்று வரை எதிர்கொள்ள முடிகிறது. அவரும் சரி, அவரது மகன் அபிஷேக் பச்சனும் சரி, கொரோனா உறுதியான நிலையில் கடந்த 11-ந் தேதி மும்பை நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயும், பேத்தி ஆரத்யாவும் கொரோனா பாதித்து அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.
கடந்த வியாழக்கிழமை, அமிதாப்பச்சன் குணம் அடைந்து விட்டார், தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்துவிட்டது என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது ஒரு தவறான பொய் என அமிதாப் நிராகரித்தார்.
கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என்கிறீர்களா? இதோ உங்கள் பார்வைக்கு-
“இரவின் இருளிலும், சில்லென்ற குளிரின் நடுக்கத்திலும் எனக்குள்ளே நான் பாடுகிறேன்… தூக்கத்துக்கான முயற்சியில் என் கண்கள் மூடிக்கொள்கின்றன. என்னைச்சுற்றிலும் திரும்பிப்பார்த்தால் யாரும் இல்லை.
நோயாளியின் வாழ்க்கையில், தொற்று பாதிப்புக்கு பின்னர் மருத்துவ நிபுணரின் நேர்த்தியான சிகிச்சைதான் மீட்பை தீர்மானிக்கும் மிகவும் மதிப்புமிக்க தருணங்கள் ஆகும்.
நாட்கள் கடந்து செல்லும்போது, மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளின் துணிச்சல்மிக்க அலைகளில் ஆராய்ச்சி நம் மீது துள்ளிக்குதிக்கிறது. டிஸ்சார்ஜ் ஆகி சென்ற பின்னரும் இன்னும் சில அடிப்படை நடத்தைகளால் ஒருவர் வியப்புக்குள்ளாக முடியும்.
கொரோனா நோயாளி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மற்றொரு மனிதரை தொடர்ந்து பல வாரங்களுக்கு பார்க்க முடியாது என்பது எதார்த்தம்
நர்சுகளும், டாக்டர்களும் வருவார்கள். மருத்துவ கவனிப்பை செய்வார்கள். ஆனால் அவர்கள் எப்போதுமே சுய பாதுகாப்பு கவச உடைகளையும், கருவிகளையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் யார், அவர்களின் அம்சங்கள் என்ன, வெளிப்பாடுகள் என்ன… ம்கூம்… நீங்கள் ஒருபோதும் தெரிந்து கொண்டு விட முடியாது. ஏனென்றால், அவர்கள் பாதுகாப்புக்காக எப்போதும் மூடப்பட்டிருப்பார்கள். எல்லாமே வெள்ளைதான். அதுவும் கிட்டத்தட்ட ரோபோ போன்றே இயங்குவார்கள். அவர்கள் பரிந்துரைக்கப்பட்டதை தந்து விட்டு வெளியேறி விடுவார்கள். காரணம், நீண்ட நேரம் அங்கே இருந்தால் தொற்று ஒட்டிக்கொண்டு விடுமோ என்ற பயம்.
எந்த டாக்டரின் வழிகாட்டுதலில் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்களோ, யார் உங்களைப்பற்றிய மருத்துவ அறிக்கையை நிர்வகிக்கிறார்களோ அவர்கள் நம்பிக்கையான வார்த்தைகளை சொல்வதற்கு ஒருபோதும் உங்கள் அருகில் வருவதே இல்லை.
சிகிச்சையின் தனிப்பட்ட விவரங்களை சொல்வதும், ஒரு உத்தரவாதம் தருவதும் தகவல் தொடர்பில் முக்கிய வாகனமாக இருக்கும். சூழ்நிலைகளில் இது மிகச்சிறந்ததாக இருக்கும். ஆனால் அதை இன்னும் பார்க்க முடியவில்லை. இது உடல் ரீதியாக சாத்தியப்படாது.
நாங்கள் எட்ட இருந்தே சிகிச்சை பெறுகிறோம். இது உளவியல் ரீதியாக, மன ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தாதா? ஏற்படுத்தும் என்றுதான் உளவியலாளர்கள் சொல்வார்கள்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய பிறகு, அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுவார்கள் என்ற பயத்துக்காக பொதுவெளியில் போகவே பயப்படுவார்கள். நோயை சுமந்தவர்களாகவே அவர்கள் பார்க்கப்படுகிவார்கள். இது ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களை ஆழ்ந்த மனச்சோர்வுக்கு தள்ளி விடும்.
நோய் அவர்களை விட்டு வெளியேறி இருந்தாலும், குறைந்தளவிலான காய்ச்சல் 3, 4 வாரங்களுக்கு தொடரும் என்பது ஒரு போதும் நிராகரிக்கப்படவில்லை.
நீண்டதாய், சுருக்கமாய் சொன்னால் அது இதுதான். இந்த நோய் குறித்த திட்டவட்டமான அம்சங்களை இந்த உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொரு விஷயமும் வித்தியாசமானது. ஒவ்வொருநாளும் ஒரு அறிகுறி உற்றுநோக்குவதற்கும், ஆராய்ச்சிக்கும் உரியதாகவே இருக்கிறது.
இதற்கு முன்னர் மருத்துவ உலகம் இவ்வளவு ஊனமுற்றதாய் இருந்தது இல்லை. ஒன்றல்லது இரண்டு பிராந்தியங்களில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் இதுதான் கதி.
சோதனையும், பிழையும் இப்போதுபோல எப்போதும் இருந்தது இல்லை”.
இப்படி பதிவு செய்து இருக்கிறார், அமிதாப்.
இப்படி ஒரு அனுபவம் வாய்க்காமல் இருக்கவும், கொரோனா உங்களை வசப்படுத்தாமல் இருக்கவும், முக கவசம், தனி மனித இடைவெளி, கைச்சுத்தம் ஆகியவற்றை வசப்படுத்துங்கள்.