சிவில் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஜான் லூயிஸ் எம்பி-யின் இறுதி ஊர்வலம், அவரது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டக்களமான எட்மண்ட் பெட்டஸ் பாலத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் வசித்து வந்தவர் ஜான் லூயிஸ். சிவில் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடியும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீண்டகால உறுப்பினருமான இவர் கடந்த 17ம் திகதி காலமானார். அவருக்கு வயது 80. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது பணிகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, புகழாரம் சூட்டினர்.
தனது வாழ்நாளின் இறுதி வரை சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான போராடிய ஜான் லூயிசின் மரணம் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவரது உடல் சொந்த மாநிலமான அலபாமாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ராணுவ மரியாதையுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
நேற்று செல்மாவில் உள்ள எட்மண்ட் பெட்டஸ் பாலம் வழியாக அவர் தனது இறுதி பயணத்தை மேற்கொண்டார். ராணுவ மரியாதையுடன், அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி, குதிரை பூட்டப்பட்ட வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பாலத்தில்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாக்குரிமை போராட்டத்தின்போது, பாதுகாப்பு படையினரால் ஜான் லூயிஸ் மற்றும் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஜான் லூயிஸ் கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர்பிழைத்த சம்பவத்தை பலரும் நினைவுகூர்ந்தனர்.
ஜார்ஜியா, அலபாமா, வாஷிங்டன் மாநிலங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் வழியாக இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
30ம் தேதி காலை அட்லாண்டாவில் உள்ள தேவாலயத்தில் ஜான் லூயிசின் இறுதிச்சடங்கு மற்றும் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பின்னர் சவுத்-வியூ கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.