உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்!

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி
ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடியேற்றத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளும் அவரது கணவரும் பிரியாவிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தனர்.

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு.

வயிற்றில் வலி மற்றும் இரண்டு வாரங்களாக வாந்தி இருந்ததாலும் கிறிஸ்துமஸ் தீவில் சிடி ஸ்கேனுக்கான வசதி இல்லாத காரணத்தினாலும் ‘பிரியா’ பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

“எனது உடல்நிலைக் காரணமாக பெரும் வலியை அனுபவித்து வருகிறேன். எனது குழந்தைகளை பிரிந்திருப்பது அதைவிட மிகப்பெரும் வலியாக உள்ளது,” என பிரியா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய தமிழ் அகதி குடும்பம், அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதுதொடர்பான வழக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இவ்வழக்கில் ஒரு சிறு

முன்னேற்றமாக இக்குடும்பத்திற்கு ஆதரவான தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது. அத் தீர்ப்பில், இக்குடும்பத்தின் இரண்டாவது குழந்தை தருணிகாவின் பாதுகாப்பு விசா பரிசீலணைத் தொடர்பாக

அக்குடும்பத்திற்கோ அல்லது அவர்களது வழக்கறிஞருக்கோ தெரியப்படுத்தவில்லை என நீதிபதி மார்க் மோஸின்ஸ்கை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த சுட்டிக்காட்டல், இக்குடும்பத்திற்கு ஆதரவான சிறு முன்னேற்றமாக கருதப்படும் நிலையில் வழக்கு நிறைவடையும் வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்த தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.