ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவை அவமதிக்கும் விதத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு சமூகஊடங்களில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச சஜித்பிரேமதாச குடும்பம் குறித்து தேவையற்ற கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரின் கருத்து பெண்களையும் சில தம்பதிகளையும் அவமதிக்கின்ற விதத்தில் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தந்தையும் பேரப்பிள்ளையை பார்த்தவருமான பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெண்களை மாத்திரம் அவமரியாதை செய்யவில்லை ஆண்களையும் அவமதிக்கும் விதத்தில் காணப்படுகின்றது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தலைவர் இவ்வாறான இழிவுபடுத்தும் கருத்தினை வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள ஹிருணிகா அந்த கூற்றுக்கு பொருத்தமான தம்பதிகள் பலர் அரசியல் பிரச்சார கூட்டத்தில் காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொறுப்புமிக்க ஒரு பிரஜையின் கருத்திற்கு எதிராக நாட்டுமக்களை குரல்கொடுக்குமாறு ஹிருணிகா கேட்டுக்கொண்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal