மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். இத்தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை No Friend But the Mountains என்ற நூலாகவும் எழுதியுள்ள பூச்சானி குர்து பத்திரிகையாளராகவும் அறியப்படுகிறார்.
இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள சென்ற பூச்சானி மீண்டும் மனுஸ்தீவுக்கு இனி திரும்பப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். இவர் நியூசிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளார் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது இன்று அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் குடியமர்த்த தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாக சொல்லி வந்தாலும், அதனை ஆஸ்திரேலிய அரசு ஏற்க மறுக்கிறது. அப்படி, ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அங்கு மீள்குடியமர்த்தப்பட்டால் அது ஆட்கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.