மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடகங்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

பொதுத் தேர்தலின் போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களை ஊடகங்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் காணப்படும் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வெறுப்பூட்டும் மற்றும் பொறுமையிழக்கச் செய்யும் வகையிலான பிரசாரங்களை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசுரித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இதனூடாக ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகமவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அரசியலமைப்பின் 104 ஆ (5) (ஆ) உறுப்புரைக்கமைய கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி அதிவிஷேட வர்த்தமானி மூலம் தேர்தகள் ஆணைக்குழு ஊடகங்களுக்கான வழிகாட்டல் நெறிகளை வெளியிட்டது. இதில் 24 மற்றும் 25 ஆம் இலக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

அவற்றில் 24 ஆம்  இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி மத நம்பிக்கைகள் , சமய பின்பற்றுதல்கள் , பேச்சு மொழி , இனம் , பழக்க வழக்கங்கள் , குலம் கோத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கை மக்களிடையே வெறுப்பூட்டும் , பொறுமையிழக்கச் செய்யும் அல்லது பொறுமையிழக்கச் செய்யப்படும் வகையிலான பிரசார நடவடிக்கைகளை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசாரம் செய்தல் அல்லது பிரசுரிப்பதனை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று 25 ஆம் இலக்கத்தில் அனைத்து ஊடக நிறுவனங்களும் சமூகத்தில் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களிடையே வெறுப்பூட்டும் அரசியலை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஒலி அல்லது ஒளி பரப்புதல் , பிரசாரம் செய்தல் அல்லது பிரசுரிப்பதனை தவிர்த்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மக்களிடையே வெறுப்பூட்டும் மற்றும் பொறுமையிழக்கச் செய்யும் வகையிலான பிரசாரங்களை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசுரித்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது இதனூடாக வலியுறுத்தப்படுகிறது.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் உயிரோட்டத்தை பாதுகாப்பதற்காக எவரும் விடுபடாத தேர்தலொன்றை நடத்துதல் அத்தியாவசியமானதாகும். பொது மக்களிடத்தில் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களின் கருத்துக்களை எடுத்துச் செல்லும் போது பிரதான ஊடகமாக வெகுசன ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நபர்களுக்கு தமது கருத்துக்களை எடுத்துச் சென்றாலும் வாக்காளருக்கு தேர்தலில் தமது அரசியல் கருத்தை வாக்குச்சீட்டின் ஊடாக சுதந்திரமாகவும் நீதியாகவும் அழுத்தங்களின்றி வெளியிடும் வாய்ப்புக்கு வெகுசன ஊடகங்கள் இடையூறு விளைவிக்கக் கூடாது. இங்கு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மைக்கு தீங்கு ஏற்படும் வகையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதனைத் தவிர்ந்து நடத்துதல் தொடர்பாக வெகுசன ஊடகங்களுக்கு மிகப் பாரிய பொறுப்பொன்று சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய பிற்போக்கின்றிய ஊடக செயற்பாட்டின் ஊடாக தமது பாரிய பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மிகவும் உயர்ந்த உயர்ந்த எதிர்பார்ப்பொன்றை இலங்கையின் ஊடகத்துறை மீது கொண்டுள்ளது. இது தொடர்பாக தமது முனைப்பானதும் நடுநிலையானதும் தலையீட்டை முன்னேறிய ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்காக ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.