ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் நபர்களை கடல் கடந்த தடுப்பில் சிறைவைப்பது எனும் கொள்கையை முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் நடைமுறைப்படுத்தி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கொள்கையின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி இணைய வழிப் போராட்டம் நடந்துள்ளது.
கொரோனா காரணமாக இணைய வழியாக நடந்த இப்போராட்டத்தில் 230 பேர் பங்கேற்றதாக இதனை ஒருங்கிணைத்த Refugee Action Collective அமைப்பு தெரிவித்துள்ளது.
சொந்த நாட்டில் ஏற்பட்ட சித்ரவதை சூழலிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பின்னரும் சித்ரவதைக்கு உள்ளாகிறோம் என தற்போது ஆஸ்திரேலிய ஹோட்டலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள மோஸ் எனும் அகதி.
முன்னதாக, மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விட நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம், அவர்களுக்கு கூட சூரிய வெளிச்சத்தைக் காண வாய்ப்புள்ளது. ஆனால், ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்களுக்கு அதுவும் எனக் குறிப்பிட்டுள்ளார் மோஸ் எனும் அகதி.
தமிழ் அகதிகள் கவுன்சில் சார்பாக பேசியுள்ள அரன் மயில்வாகனம், முக்கியமான கட்சிகள் அகதிகளின் உரிமைகளை கோருவதில்லை என்றும் லேபர் கட்சியின் ஆதரவின் மூலமே ஆஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக கையாள்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் கிறிஸ்துமஸ் தீவில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி பிரியா மயக்கமடைந்த பிறகே ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் உள்ள பெர்த் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மயில்வாகனம் சுட்டிக்காட்டியுள்ளார். இது மட்டுமின்றி ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழும் பல அகதிகள் தாங்கள் நாடுகடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.