தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ்ப்பாண கிளிநொச்சி வேட்பாளர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் , சிறீகாந்தா மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மண் என்பது ஒரு போராட்ட களத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலிகொடுத்த இடம். இந்தப் போராட்டம் தேவையற்ற ஒரு காரணத்துக்காக நடைபெறவில்லை. தமிழ் மக்கள் கௌரவமாக வாழ வேண்டும், தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம் பாதுகாக்கப்பட்ட வேண்டும்இ தமிழ் மக்களுடைய எதிர் காலம் சுபீட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் போரட்டம் அனைத்தும் நடைபெற்றது. இந்த போராட்ட களத்தில் லட்சக்கணக்கான உயிர்களை கொடுத்துள்ளேம். இன்று ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் மக்களுடைய மீதமுள்ள அனைத்தையும் கபளீகரம் செய்கின்றார்கள். எமது காணிகள், நிலங்கள் அனைத்தும் பறி போகின்றது. மண்லாறு என்ற எமது நிலம் வெலி ஓயாவாக மாறியுள்ளது.
தமிழ் மக்களுக்கு உரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிங்கள மக்களுக்கு அதற்கான உறுதிகள் வழங்கப்பட்டுள்ளது. எமது மக்கள் விவசாயம் செய்யவதற்கு நிலம் இல்லாமல் இருக்கின்றார்கள். கொக்குளாய், கொக்குதொடுவாய் போன்ற இடங்கள் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் அரசால் கபளீகரம் செய்யப்படுகிற்ன நிலை காணப்படுகின்றது. அவ்வாறு செய்யப்பட்டு வெலிஓயாவுடன் இணைப்பார்களாக இருந்தால்; வடக்கும் கிழக்குக்கும் இடையில் அனுராதபுரம் என்ற மாவட்டம் வந்து சேரும். அதனால் வடக்கும் கிழக்குக்குமான நிலத்தொடர்புகள் துண்டிக்கப்படும். ஆகவே, இருப்புக்களை பாதுகாக்க வேண்டும்.
திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று முற்றுமுழுதாக பறிக்கப்பட்டுள்ளது. ஆடிஅமாவைசைக்குச் சென்ற மக்ககளுக்கு சம்பந்தன் தனது அரசியல் கருத்துக்களை கூறினாரே தவிர அவை பறிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீட்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல முல்லைத்தீவில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பெரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் வெடுக்குநாரி மலை சிவன் கோவில் எமது கையைவிட்டு போகும் நிலையில் உள்ளது.
இப்பொழுது இராணுவம் குறிவைத்திருக்கும் இடமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. எமது நிலங்களை எவ்வாறு கபளீகரம் செய்வது, முல்லைத்தீவை எவ்வாறு அனுராதபுரத்துடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு எந்த தீர்வும் பெற்றுக் கொடுக்கவில்லை, அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், இன்று அமைச்சுப் பதவிகள் பெற தங்களை நாடாளுமன்றம் அனுப்புங்கள் என்று கேட்டு வருகின்றார்கள்.
கடந்த அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருந்த கூட்டமைப்பினர் கம்ரெலியவைக் கூறி வாக்குகேட்டு வருகின்றார்கள். கம்பரெலிய என்பது வடக்கு கிழக்குக்கான அபிவிருத்தி அல்ல முழு இலங்கைக்கும் அரசாங்கம் வழங்கிய ஒன்றாகும். ஆகவே, இவற்றை புரிந்து கொள்ளுங்கள் என்றார்