தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டார்.
கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை குற்றம் நீக்கி, விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. கண்ணதாசன் சார்பில் எம். ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
வழக்கு மே மாதம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் குற்றத்தை விசாரணை செய்ய வேண்டும் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான குமார் ரட்ணம் விண்ணப்பத்திருந்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் பதிலுரைத்திருந்தார்.
அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்துச் செய்து அவரை வழக்கிலிருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்யக் கட்டளை வழங்கியது.
Eelamurasu Australia Online News Portal