சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்; குறித்த விசாரணைகளுக்கு பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிமன்றம் சிஐடியினருக்கு தெரிவித்துள்ளது.
தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை சிஐடியினர் கைப்பற்றிய திகதி தொடர்பான குழப்பம் குறித்து தரிசா பஸ்டியனின் சட்டத்தரணிகள் விளக்கமளித்த பின்னர் கொழும்பு பிரதானநீதிவான் லங்கா ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
ஜீன் மாதம் தரிசா பஸ்டியனின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்ட மடிக்கணிணியை ஜீன் நான்காம் திகதி சிஐடியினர் எடுத்துச்சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
காவல் துறை இரண்டுதடவை பத்திரிகையாளரின் வீட்டுக்கு சென்றமையினால் இந்த விடயத்தில் குழப்பம் காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இன்று சுவிஸ் தூதரக பணியாளர் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் ஆராய்ந்த வேளை ஜூன் பத்தாம் திகதியே சிஐடியினர் மடிக்கணிணியை எடுத்துச்சென்றனர் என தரிசா பஸ்டியனின் குடும்பத்தினர் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியை சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
திகதி குறித்த குழப்பத்துக்காக சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டனர். எனினும் சிஐடியின் சார்பில் ஆஜராகிய அதிகாரி தரிசா பஸ்டியனின் இந்த தெளிவுபடுத்தலை எதிர்த்ததுடன் தரிசா ஆரம்பம் முதல் விசாரணைகளை குழப்பிவருகின்றார் என குற்றம்சாட்டினார்
எனினும் மடிக்கணிணி எடுத்துச்செல்லப்பட்ட திகதி குறித்து தரிசா பஸ்டியனின் சட்டத்தரணிகள் தெரிவித்ததை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
எனினும் சுவிஸ்தூதரக ஊழியர் தொடர்பான விசாரணைக்கு தரிசா பஸ்டியன் குழப்பமேற்படுத்தியுள்ளார் என தெரியவந்தால் அவரை விசாரணை செய்யலாம் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் என நீதவான் ஆலோசனை வழங்கியுள்ளார்
Eelamurasu Australia Online News Portal