அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹு மெக்டெர்மார்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புரொஸ்பெக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹுமெக்டெர்மார்ட், தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருபவர்.
இந்நிலையில், நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இது தொடர்பான பிரேரணையை அவர் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அவர் உரையாற்றுகையில், “உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர்.
எனவு இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி என்பது தெற்காசிய நாடுகளுக்கு மிக முக்கியமானது.
தமிழ் மொழியை அவுஸ்திரேலிய பாடப்புத்தகத்தில் இணைத்துக் கொள்வதன் மூலம் அவுஸ்திரேலிய மாணவர்களும் பயன்பெற முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
நியூ சௌத் வெல்ஸ் மாநில மற்றும் அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கங்கள் தமிழ் மொழிக் கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹ_ மெக்டெர்மார்ட் இவ்வுரையை நிகழ்த்தும்போது அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புகளின் பிரமுகர்கள் பலரும் நியூ சவுத் வெல்ஸ் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தனர்.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹுமெக்டெர்மார்ட்டின் உரைக்கு பல தமிழ் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.