தன்னைவிட அதிக தேசப்பற்று மிக்கவர் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவியவர்களின் சுவாசக்காற்று மூலமாகவும் வைரஸ் பரவுவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, செய்தியாளர்களை சந்திக்கும் போது என அனைத்து நேரமும் முக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தார். அவருடைய நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோதும் டிரம்ப் முகக்கவசம் அணியவில்லை.
ஆனால், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையடுத்து கடந்த 12 ஆம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது டிரம்ப் முகக்கவசம் அணிந்து கொள்கிறார்.
இந்நிலையில், முகக்கவசம் அணிவதை டொனால்டு டிரம்ப் தேசப்பற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரசை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை’ என்றார்.
Eelamurasu Australia Online News Portal