கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் பல ஆண்டுகளாக பகைமை நிலவி வந்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு பகைமையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது.
தற்போது மீண்டும் வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியா சென்ற வட கொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வட கொரிய அரசை விமர்சிப்பது போன்ற துண்டு பிரசுரங்களை ஹீலியம் பலூன்கள் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வந்தனர்.
இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் கொரிய எல்லையில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்தது.
மேலும் தென் கொரியாவுடனான உறவை முற்றிலுமாக துண்டிப்பதாகவும் அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடகொரியா தெரிவித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்தது.
எனினும் தென் கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஒத்திவைப்பதாக வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த மாத இறுதியில் அறிவித்தார்.
இருப்பினும் இரு நாடுகள் இடையேயான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் தலைமையில் அந்நாட்டின் ராணுவ கூட்டம் பிரமாண்டமான முறையில் நடந்தது. ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது மற்றும் போர் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகமான கே.என்.சி.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரிய தீபகற்பத்தில் உள்ள சிக்கலான நிலைமையை கருத்தில் கொண்டு வடகொரியா ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது மற்றும் துருப்புகளை அணிதிரட்டுவதற்கான தயார் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் போர் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் சாத்தியமான ராணுவ அச்சுறுத்தலை எதிர் கொள்வது போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவர் ரி பியோங் சோல் உள்ளிட்ட உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அவர்கள் ராணுவ உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்குப் பிறகு தலைவர் கிம் ஜாங் அன் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.