ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ள மந்த்ரா ஹோட்டலில் உள்ள ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 8ம் தேதி ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை 4யிலிருந்து அந்த நபர் இந்த ஹோட்டலில் வேலை செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வருகின்றது.
“அனைவரும் பீதியில் இருக்கின்றனர்….யாருக்கேனும் இங்கு தொற்று ஏற்பட்டால் எங்கள் அனைவருக்கும் தொற்று ஏற்படக்கூடும்,” என அச்சம் தெரிவித்துள்ளார் அங்கு வைக்கப்பட்டுள்ள தஞ்சக்கோரிக்கையாளரான முஸ்தபா அஸிமிடபர்.
பப்பு நியூ கினியா மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட 60க்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள்தாகக் கூறுகிறார் அகதிகள் வழக்கறிஞரான ஜேன் சாலமன்.
“சில வாரங்கள் அல்லது சில மாதங்களாக விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா தனிமைப்படுத்தலினால சாதாரண குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள மனநலச் சிக்கல்களை 7 ஆண்டுகள் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்ட பின்னர் 12 மாதங்கள் ஓர் அறையிலேயே வைக்கப்பட்டிருக்கும் (அகதிகளின்) நிலையோடு ஒப்பிட்டால் அற்பமானதாக இருக்கும்,” எனக் கூறியுள்ளார் ஜேன் சாலமன்.
இந்த நிலையில், “தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விரும்பினால் சொந்த நாட்டிற்கு செல்லலாம், அல்லது நவுரு அல்லது பப்பு நியூ கினியாவில் குடியமரலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர முடியாது,” எனத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ்.
Eelamurasu Australia Online News Portal