தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கோட்டாபயவின் அரசு தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடமராட்சி-கலிகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்
மிருசுவில் படுகொலையாளி இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றமே செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் வாடுகின்றனர்.
நல்லாட்சி அரசில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், இன்று போர்க்குற்றவாளிகள் எனக்குறிப்பிடப்படும் ராஜபக்ஷ தரப்பினரிடம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக் கடிதம் அனுப்புகின்றனர்.
விடுதலைப்புலிகள் மீள உருவாகின்றார்கள் என்ற அச்சத்தின் மத்தியில் எம்மை வைத்திருப்பதற்காகவும், நாங்கள் வாய்பேசாமல் இருப்பதற்காகவும் அரசு தீவிரமாக செயற்படுகின்றது. அதன் தொடர்ச்சியாகவே சில கைதுகள் இடம்பெறுகின்றன என்றார்.