கொரோனா பெருந்தொற்று பரவிவரும் இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சாத்தியமற்றதாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் தலையிடுமாறு பணியிட ஒழுங்கினைக் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய அரசத் துறையான ‘Comcare’யை ஆஸ்திரேலிய வழங்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நெரிசல்மிக்க குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாக உள்ளதால், இம்மையங்கள் ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் பாதுகாப்பு(Health and Safety) சட்டங்களை மீறுபவையாக உள்ளன என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வரும் மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் காவலாளிக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ‘Comcare’ தலையிடக்கோரி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comcare என்பது ஆஸ்திரேலியாவில் தடுப்பு மையங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் அதிகாரம் கொண்ட அரசத் துறையாக செயல்பட்டு வருகின்றது.
முன்னதாக இந்தாண்டின் தொடக்கத்தில் கூட்டறிக்கை வெளியிட்டிருந்த தொற்று நோய்களுக்கான ஆஸ்திரலேசியா (Australasia) சொசைட்டி, தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஆஸ்திரேலிய கல்லூரி, குடியேற்ற தடுப்பு மையங்களில் உள்ளவர்களை சமூகத்திற்குள் ஆஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது.
அதே போல், குடியேற்ற தடுப்பு மையங்களில் கொரோனா பரவக்கூடிய ஆபத்து உள்ளதாக அரசுக்கு ஏற்கனவே லேபர் கட்சி எச்சரித்து இருந்தாக லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Ged Kearney தெரிவித்துள்ளார். இவரது தொகுதி எல்லைக்குள் மெல்பேர்னில் மந்த்ரா ஹோட்டல் வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
“பல மாதங்களுக்கு முன்னதாகவே தடுப்பு மையங்களில் கொரோனா பரவக்கூடிய ஆபத்துள்ளதை மாரிசன் அரசாங்கத்திற்கு எச்சரித்திருந்தோம். ஆபத்தைக் குறைக்க தடுப்பில் உள்ளவர்களை சமூகத்திற்குள் விடுவிக்கலாம் என்றோம். ஆனால், அது செய்யப்படவில்லை,” என நாடாளுமன்ற உறுப்பினர் Ged Kearney குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலிய தடுப்பு மையங்கள், தடுப்பிற்கான மாற்று இடங்கள் உள்ளிட்டவற்றில் 1,373 அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.