தலைகள் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகளை மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மெக்டொனால்ட், நிகோல் மெக்டொனால்ட் தம்பதியினருக்கு கடந்த வருடம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இவ்விரு ஆண் குழந்தைகளின் தலையும் நேருக்கு நேராக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்காணப்பட்டன. துடிப்புடன் காணப்பட்ட இக்குழந்தைகளால் அமர்ந்திருக்கவோ, நடக்கவோ முடியவில்லை.
படுத்த படுக்கையில் அதுவும் ஒரு குழந்தை புரண்டால் மற்ற குழந்தையும் புரளும் நிலை காணப்பட்டது. ஜேடன், அனியஸ் என பெயரிடப்பட்ட இக் குழந்தைகளுக்கு தற்போது 13 மாத வயதாகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் சென் புரோன்ஸ் நகரிலுள்ள மொன்ட்டேபியோர் மருத்துவ நிலையத்தில் இக் குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன.
சி.என்.என். தொலைக்காட்சியின் தலைமை மருத்துவ செய்தியாளரான நரம்பியல் மருத்துவர் டாக்டர் சஞ்சய் குப்தா இச்சசத்திரசிகிச்சை அறைக்குச் செல்வதற்கான விசேட அனுமதியைப் பெற்றிருந்தார்.
அவரும் ஊடகவியலாளர் வெய்ன் ட்ரேஷும் இணைந்து இச் சத்திரசிக்சை தொடர்பான விபரங்களை அறிக்கையிட்டுள்ளனர். டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச் தலைமையிலான மருத்துவ குழுவினர் இச் சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.
கடந்த 12 ஆம் திகதி வியாழக்கிழமை காலையில் ஆரம்பித்த இச் சத்திரசிகிச்சை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிவரை நீடித்தது. அதன் பின் 39 வயதான பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஒரே டேப்பர் இக் குழந்தைகளின் மண்டையோட்டை மறுசீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இச் சத்திரசிகிச்சையின் பின்னரான மிக ஆபத்தான ஆரம்ப நாட்களைக் இக் குழந்தைகள் கடந்தவுடன் இப் பெற்றோரான கிறிஸ்டியனும் நிகோலும் பெரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இவர்களுக்கு 3 வயதான மற்றொரு மகனும் உள்ளான்.
உலகில், 25 இலட்சம் பிரசவங்களில் ஒன்றில் இவ்வாறு இரட்டைக் குழந்தைகளின் தலைகள் ஒட்டிப் பிறக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இக் குழந்தைகளில் 40 சதவீதமானவை இறந்து பிறக்கின்றன.
சுமார் 30 சதவீதமான குழந்தைகள் பிறந்து 24 மணித்தியாலங்களில் இறந்துவிடுகின்றன. இந்நிலையிலிருந்து தப்பும் குழந்தைகளில் 80 சதவீதமானவை 2 வயதுக்குள் பிரிக்கப்படாவிட்டால் இறந்துவிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிகோல் மெக்டொனால்ட் கர்ப்பமடைந்திருந்த போது இரு குழந்தைகளும் தலைப்பகுதியில் ஒட்டியுள்ளதாக அறிந்தவுடன் அழுதுவிட்டராம். ஆனால், “இவை கடவுள் உனக்குத் தந்தவை” என தனது தாயார் கூறியபோது தான் அழுகையை நிறுத்தியதாகவும் இக் குழந்தைகளை பெற்று வளர்க்கத் தீர்மானித்ததாகவும் 31 வயதான நிகோல் மெக்டொனால்ட் கூறுகிறார்.
இச் சத்திரசிகிச்சைக்கான சுமார் 25 இலட்சம் அமெரிக்க டொலர் (சுமார் 36 கோடி) எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக மக்களிடமிருந்து நிதிதிரட்டும் நடவடிக்கையை கிறிஸ்டியன், நிகோல் தம்பதியினர் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது தமது பிள்ளைகளின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, தமக்கு இன்னும் எவரேனும் உதவ விரும்பினால் தமக்குப் பதிலாக, இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த ஜொனி டேனியல் எனும் ஒரு வயது குழந்தையொன்றுக்கு சத்திரசிகிச்சைகள் செய்வதற்காக அக் குழந்தையின் பெற்றோருக்கு உதவுமாறு இவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1980 களின் நடுப்பகுதி வரை இத்தகைய ஒட்டிப்பிறந்த குழந்தைகளை பிரிக்கும் சிக்கலான சத்திரசிகிச்சைகளின்போது, இரு குழந்தைகளில் மிகப் பலவீனமான குழந்தையை தியாகம் செய்து மற்றைய குழந்தையை காப்பாற்றும் வழக்கம் கைகொள்ளப்பட்டது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.
இச் சத்திர சிகிச்சைக்கு தலைமை தாங்கிய டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச் 70 வயதானவர். இதற்குமுன் 2004 ஆம் ஆண்டு தலை ஒட்டிப்பிறந்த இரு சிறுவர்களை சத்திரசிகிச்சை மூலம் அவர் வெற்றிகரமாக பிரித்தார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்ல் அகுய்ரே, கிளேரன்ஸ் அகெய்ரே எனும் இரு சிறுவர்களுக்கு தற்போது 14 வயது. இவர்கள் இன்னும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிக்கின்றனர்.
இச் சத்திரசிகிச்சையின் மூலம் புகழ் பெற்ற டாக்டர் குட்ரிச் உலகின் பல நாடுகளில் , வேறு உடற்பகுதிகளில் ஒட்டிப்பிறந்த 5 சோடி குழந்தைகளை இவர் பிரித்துள்ளார். இவ் வருட முற்பகுதியில், சிரியாவைச் சேர்ந்த இரு இரட்டைக் குழந்தைகளை சவூதி அரேபியாவில் வைத்து சத்திரசிகிச்சை மூலம் இவர் பிரித்தெடுத்தார்.
12 வருடங்களின் பின் இரண்டாவது தடவையாக தலை ஒட்டிப்பிறந்த குழந்தைகளை டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளார். அவர் மேற்கொண்ட சத்திரசிகிச்சைகளில் இதுவே மிக அதிக நேரம் நீடித்தது.
வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருடனும் கலகலப்பாக பழகும் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சின் தாரக மந்திரம் எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு மெதுவாகவும் கவனமாகவும் செய்யுங்கள் (Take it easy and slowly and carefully) என்பதாகும்.
இதை வலியுறுத்தும் வகையில், சத்திர சிகிச்சைக் கூடத்தில் தான் தலையில் அணியும் ‘சேர்ஜிகல் கெப்பை’ ஆமை உருவங்களால் அலங்கரித்துள்ளார் டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச்.