மிருசுவிலில் 8 அப்பாவிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மரணத ண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு, செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2000.12.19 ஆம் ஆண்டு மிருசுவிலில் பகுதியில் 5 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 4 சிறுவர்களும் 4 ஆண்களுமாக 8 பேரைப் படையினர் படுகொலை செய்த வழக்கில் ;ட்ரயல் அட் பார் விசாரணை மூலம் 2015 ஜூலையில் குற்றவாளி எனக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ; இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரட்ணாயக்கா அந்த மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்துஉயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்திருந்தார்.
அந்த மேன்முறையீடு 5 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டு மேற்படி மரண தண்டனை ஐந்து நீதியரசர்கள் ஆயத்தினால் ஏகமனதாக உறுதி செய்யப்பட்டது . அவ்வாறு தண்டனை உறுதி செய்யப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்தவரை தற்போதைய ஜனாதிபது கோட்டாபய ராஜபக்ஷ 2020.03.26 அன்று மன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.
வழக்கில் இன்று ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதனை ஆட்சேபித்து நான்கு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று காலை இவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இரண்டு வழக்குகள் இறந்தவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டவை. மற்றைய இரண்டும் பொது நல வழக்குகள். உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். மற்றையதில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆஜராகியிருந்தார்.
பொது நலன் சார்ந்த இரண்டு வழக்குகளில் ஒன்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மற்றையது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான அம்பிகா சற்குருநாதனால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பமானபோது ஒரு வழக்கு தொடர்பாக மட்டுமே சுனில் ரட்ணநாயக்கவுக்கு கிடைத்திருந்தது. ஏனைய வழங்குகள் தொடர்பில் அவருக்கு அறிவித்தல் எதுவும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் அவர் சார்பில் மற்றொருவர் ஆஜராவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அவற்றை மீள அனுப்புவதற்காகவும், நீதி அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பதால் அந்தப் பெயரை மாற்றுவதற்காகவும் செப்டம்பர் 24 வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.