ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் !

ஆஸ்திரேலியாவைப் படகு வழியாக அடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்ற அகதிகளை விடுவிக்கக்கோரி வரும் ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற இருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள், அவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனும் கொள்கையினை 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார் .

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட். அதன்படி, இன்று வரையிலும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசனும் தடுப்புக் கொள்கையினை பின்பற்றி வரும் நிலையில் இப்போராட்டம் நடைபெற உள்ளது.

பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர வேண்டும், காலவரையின்றி வைக்கப்பட்டுள்ள தடுப்பினை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்திருக்கின்றனர்.

இப்போராட்டம் ஆஸ்திரேலியாவின் அடியெல்ட், பிரிஸ்பேன், கெய்ர்ன்ஸ், கேன்பெரா, மெல்பேர்ன், நியூகேஸ்டில், சிட்னி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.