இலங்கையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள், சமாந்தரமான ஒரு அரசு உருவாக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக, கடந்தவாரம் ஒரு அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார், ஐ.நாவின் முன்னாள் விசேட நிபுணரான யஸ்மின் சூகா
தென் ஆபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற, அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக உள்ள, ; யஸ்மின் சூகா ; வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
அவர் இங்கு சமாந்தரமான அரசு என்று குறிப்பிட்டிருப்பது, ; ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு இணையான ; ஒரு நிழல் ஆட்சியைத் தான்
இலங்கையில் ; ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டவை அல்ல.
ஜனாதிபதியின் அதிகாரத்தை கொண்டு, வேறெந்த சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாத வகையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்கு பரந்த அளவில் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக யஸ்மின் சூகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ; சமாந்தரமான அரசு என்பது புதியதொரு விடயமல்ல.
<p>விடுதலைப்புலிகளின் காலத்தில், வடக்கிலும் ; கிழக்கின் சில பகுதிகளிலும், ; அவர்களின் நிர்வாகமே, காணப்பட்டது.
தனியரசுக்கான கட்டுமானங்களுடன் புலிகள், சமாந்தரமான அரசு ஒன்றை கட்டி எழுப்பி வந்தனர்.
ஆனால் தெற்கில், ; அவ்வாறான சமாந்தர அரசு முன்னெப்போதும் இருந்ததில்லை.
>பிரித்தானியாவின் ; வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சி முறையை பின்பற்றும் இலங்கையின் ஜனநாயகத்தில், அங்குள்ளதைப் போன்று, நிழல் அமைச்சரவைக்கு கூட இடம் இருக்கவில்லை.
<p>ஆனால் இப்போது, இராணுவ ஆதிக்கம் அதிகமுள்ள செயலணிகளின் மூலம், சமாந்தரமான அரசு உருவாக்கப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
கோத்தாபய ராஜபக்ச, ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்தது தொடக்கம், தமது நிர்வாகத்தில் இராணுவ அதிகாரிகளையே முன்னிலைப்படுத்தி வருகிறார்.
கோத்தாபய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் மூன்றில் இரண்டு பகுதியை இராணுவ அதிகாரிகளிடமும், தனது குடும்பத்தினரிடமுமே கொடுத்திருக்கிறார் என்று கடந்த புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக குறிப்பிட்டார்.
அவ்வாறாயின் ஏனையவர்களுக்கு இடம் எங்கே என்றும் தயான் ஜயதிலக கேள்வி எழுப்பியிருந்தார். தற்போதைய அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இருந்த நிலையை விடவும் மோசமான நிலைக்கு சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டதுடன், இது இலங்கையை சர்வதேச ரீதியாக மேலும் தனிமைப்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால், சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் போக்கிலிருந்து விடுபடுவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவோ அவரது அரசாங்கமோ தயாராக இல்லை.
இராணுவ பின்புலத்துடன் கூடிய ஒரு ஆட்சியை நிறுவுவதன் மூலம் தம்மை பலப்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார்.
அதனை மையப்படுத்தியே எல்லா செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்கத்தில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகள் மேலோங்கி உள்ள சூழலில், மற்றொரு புறத்தில் வடக்கு, கிழக்கில் இராணுவ அதிகாரம் விரிவாக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சாட்டாகக் கொண்டு, முகாம்களை விட்டு வெளியே கொண்டு வரப்பட்ட இராணுவத்தினர், இப்போது, வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி நிறுத்தப்படும் நிலை தோன்றியிருக்கிறது, அல்லது தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, வடக்கில் கடந்த பல வாரங்களாகவே பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகளை வைத்துக் கொண்டு, அன்றாட செயற்பாடுகளில் இராணுவத் தலையீடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
சுற்றிவளைப்புகள், தேடுதல் வேட்டைகள், பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்ளும் வகையிலான, சில சம்பவங்களும் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது,
அத்தகைய சம்பவங்கள் எத்தகைய பின்னணியில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் இருக்கிறது.
இவற்றைச் சாட்டாக வைத்து, 25 இற்கும் அதிகமானோர் அண்மைக்காலங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வடக்கைப் பொறுத்தவரை, போருக்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எவ்வாறான இறுக்கமான ஒரு இராணுவ நெருக்குவாரம் கொண்ட சூழல் காணப்பட்டதோ அதை ஒத்த நிலைக்குச் சென்று விட்டதாகவே தெரிகிறது. இது மிகநுட்பமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு நகர்வாகவே நோக்கப்படுகிறது.
வடக்கில் தோற்றுவிக்கப்பட்டு வரும் இந்த இராணுவ நெருக்குவாரம், அடுத்த மாதம் நடக்கவுள்ள தேர்தலிலும் தாக்கங்களைச் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்புலிகள் தினமான, ஜூலை 5ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகங்கள் இராணுவத்தினரால் சோதனையிடப்பட்டதை அடுத்து, அந்தக் கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி சுகாஸ், தமது கட்சியை இலக்கு வைத்தும், சுதந்திரக் கட்சி வேட்பாளர் அங்கஜனை வெற்றி பெற வைக்கும் நோக்கிலும் இராணுவம் செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூட, வடக்கு கிழக்கில் தேர்தல் விவகாரங்களில் இராணுத்தினர் தலையீடு செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடமும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடமும் கோரியிருந்தார்.
எனினும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அதனை நிராகரித்திருக்கிறார்.
தமிழ் அரசியல்வாதிகள் இராணுவத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அவர் கூறியிருக்கிறார்.
தேர்தலில் இராணுவத்தினர் நேரடியாகத் தலையீடு செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தாலும், வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகள், தேர்தலில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவரால் நிராகரிக்க முடியாது.
ஏற்கனவே, கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதனை சார்ந்த சுகாதார வழிமுறைகளின் படி வாக்களிக்க, வாக்காளர்கள் எந்தளவுக்கு முன்வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது.
இவ்வாறான நிலையில் வடக்கில் படைக்குவிப்புகளால், இராணுவ நெருக்குவாரங்களால், பொதுமக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதை குறைத்துக் கொள்ளக் கூடிய ஆபத்து உள்ளது. இது ஆளும்தரப்புக்கே சாதகமாக அமையலாம்.
குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட ஆளும் தரப்புக்கு வாக்களிப்பு அதிகமாக இருப்பது பாதகம். வாக்களிப்பு குறைந்தால், அவர்களும் ஆசனங்களை பங்கிடலாம்.
எனவே, தற்போதைய இராணுவ நெருக்குவாரங்கள் வாக்களிப்பை குறைக்குமானால், தேர்தலில் இராணுவத்தின் தலையீடு இருக்கவில்லை என்று எவரும் கூற முடியாது.
இலங்கையில் அதிகரித்து வருகின்ற இராணுவத் தலையீடுகள், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. தேர்தலை நடத்துவதை மாத்திரமே, உச்சபட்ச ஜனநாயகமாக அரசாங்கம் பார்க்கிறது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் அவ்வாறு தான் கூறப்பட்டது. ஆனால், ஜனநாயகம் என்பது தேர்தல்களை கிரமமாக நடத்துவது மாத்திரமன்று.
தேர்தல்கள்- ஒழுங்காகவும் நியாயமாகவும், அமைதியான முறையில், அச்சுறுத்தல் இல்லாத சூழலிலும், நடக்க வேண்டும்.
வாக்காளர்கள் இயல்பாக வாக்களிக்க வர வேண்டும். 2015இற்குப் பின்னர் நடந்த தேர்தல்களில் வடக்கில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகின
இம்முறை பொதுத் தேர்தலில் ; வாக்களிப்பு வீதம் குறையுமாக இருந்தால், அது இராணுவ நெருக்குவாரத்தின் விளைவாகத் தான், கருதப்படும். சர்வதேச சமூகமும் அவ்வாறு தான் எடுத்துக் கொள்ளும்.
அத்தகையதொரு நிலை அரசாங்கத்துக்குப் பாதகமாகவே அமையும் என்ற போதிலும், அதனைப் பற்றி கவலைப்படாமல் படை மயமாக்கலிலேயே அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
சுபத்ரா