எனக்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லை!- முத்தையா முரளிதரன்

தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலினை தங்களுக்கானதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கொழும்பு வேட்பாளர் விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்து முத்தையா முரளிதரனினால்  தமிழ் வர்த்தகர்களுக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்விலேயே முத்தையா முரளிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன மத பேதமின்றி அனைவருக்கும் சிறந்த சேவைகளை நாம் வழங்கி வருகின்றோம்.

மேலும் அரசியல்வாதிகள் மக்களுக்கு உதவுவார்கள் என ஒவ்வொரு காலமும் எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றோம்.

நான் எதனையும் எதிர்பார்த்து உதவிகளை செய்வதில்லை. அதனை எவருக்கும் தெரியப்படுத்துவதும் இல்லை.

வடக்கிற்கான ஆளுநர் பதவி  எனக்கு கிடைத்தப்போது அதனை வேண்டாமென மறுத்தேன்.

எனக்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனது தம்பியை களமிறக்கியுள்ளோம். அவரின் ஊடாக, மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்துக்கொண்டே இருப்பேன்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிதான் தொடர்ந்து நிலவ இருக்கின்றது.