இலங்கையில் அண்மைக்காலமாக சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கான இடைவெளி மிக விரைவாகச் சுருங்கி வருவதாகவும் செயற்பாட்டாளர்கள் இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்ற 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்றும் இலங்கையின் மீது இன்னமும் வலுவான அணுகுமுறைகள் பிரயோகிக்கப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும், கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றிய ஐ.நா விசேட அறிக்கையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகளுக்கான சர்வதேசக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் உள்ளிட்ட 7 மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐ.நா விசேட அறிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி விரைவாகச் சுருங்கி வருகின்றது. கடந்த சில மாதகாலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு ; உட்பட்டு வருவதுடன், அரசாங்கத்தின் வெவ்வேறு கட்டமைப்புக்களால் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுகின்றன.
விசனமளிக்கும் வகையில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் கருத்துச்சுதந்திரம், அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பேற்படுத்தித் தந்துவிட்டது என்பதுடன், இந்நிலைமை சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களான ரம்ஸி ரஸீக் போன்றவர்களைக் கைது செய்து தடுத்துவைப்பதில் சென்று முடிந்திருக்கிறது. சட்டத்தரணியும், சிறுபான்மை சமூக உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படாமல் சுமார் 3 மாதகாலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்கத்தினால் பல்வேறு ஜனாதிபதி செயலணிகள் நிறுவப்பட்டு வருகின்றன. இத்தீர்மானங்கள் அனைத்தும் பாராளுமன்றத்தின் மேற்பார்வையோ, அனுமதியோ இன்றியே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பானதும், ஒழுக்கமானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி முழுவதுமாகப் பாதுகாப்புத்துறையினரை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டிருப்பதுடன், அதன் செயற்பாடுகள் பற்றிய வரையறை தெளிவற்றதாகவும் காணப்படுகின்றது.
இது மக்கள் மீது இராணுவ அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி பொலிஸாருடன் பெருமளவான இராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், அண்மையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்டற்ற அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டிருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவதானத்திற்குரிய நிலையாகும்.
இந்நிலையில் இலங்கையின் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பகிரங்கமாகப் பங்கேற்கக்கூடியதும், கருத்து வெளியிடக்கூடியதுமான ஒரே தளமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைகள் விளங்குகின்றது. எனினும் மனித உரிமைகள் பேரவையில் பேசுகின்றவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் அதிகரித்துவரும் நிலை காணப்படுகின்றது. இந்த மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் ‘துரோகிகள்’ என்று இழிவுபடுத்தப்படுகிறார்கள்.
எனவே இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டிய கடப்பாடு மனித உரிமைகள் பேரவைக்குக் காணப்படுவதுடன், இலங்கை தொடர்பில் இன்னும் வலுவான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. மேலும் தொடர்ந்தும் விசேட ஆணையாளர் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.