அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதல் – ஒருவர் காயம்

அவுஸ்ரேலியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஆடவர், இன்று(24) அதிகாலை சுறா மீன் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் பிரபல அவுஸ்ரேலியச் சுற்றுலாத் தலமான Byron Bayக்கு அருகே உள்ள கடற்கரையில் நடந்ததாகத் தகவல்கள் கூறின.

சிட்னி நகருக்கு சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது Byron Bay.  அந்தக் கடற்கரையில் ஒருவர் தமது பலகையுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தார்.

சாதகமான அலை ஒன்றுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த வேளையில், அவருக்குக் கீழிருந்து சுறாமீன் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தாக்குதலின் பெரும்பகுதியை அவரது அலைச்சறுக்குப் பலகை தாங்கிக்கொண்டதால், ஆடவர் காலில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். அவரைத் தாக்கியது எந்த வகைச் சுறாமீன் என்ற விவரம் தெரியவில்லை.

அந்தக் கடற்கரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.