புனிதமிழந்த கோஷங்கள்

மெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ; சமாதானம் ; யுத்த நிறுத்தம் ; நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்துவிட்டன. இப்பொழுதும் புனிதமிழக்காமல் இருக்கும் வார்தைகள் எவை என்று பார்த்தால் வீதிகளின் பெயர்கள் ; நகரங்களின் பெயர்கள்; படையணிகளின் பெயர்கள் ; படைப் பிரிவுகளின் பெயர்கள் போன்றவைதான்”.

இது ஒரு யுத்த களத்தை பற்றிய சித்திரிப்பு. ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின் இலங்கைத் தீவில் தமிழ்ப் பகுதிகளில் தேசம் ; தேசியம் ; தாயகம் ; சுயநிர்ணயம்; ; உரிமை ; விடுதலை போன்ற வார்த்தைகளும் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டனவா ? என்று கேட்கத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் ஒன்றை ஒன்று வெட்டும் சந்தியில் சுவர்களில் டக்ளஸ் தேவானந்தாவின் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது…… “தமிழர் தேசம் தலை நிமிர வீணைக்கு வழங்கும் ஆணை விடியலைத் தரும் நாளை” இங்கு அவர் தேசம் என்று கருதுவது எதனை? அவர் கருதும் தேசத்துக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் “ஒரு நாடு இரு தேசத்தில்” வரும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர் கருதும் தேசத்துக்கும் கூட்டமைப்பு முன்வைக்கும் தேசத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன ? அவர்தான் கூறவேண்டும்.

 

jaffna-elections.jpg

கடந்த வாரம் கிளிநொச்சியில் அங்கஜன் இராமநாதன் விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை பார்த்தேன்; அதில் அவர் “எனது அரசியல் நிலைப்பாடு” என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறார்…… “தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை நான் நன்கு புரிந்து கொண்டவன். என்னால் முடிந்த அளவுக்கு எமது மக்களின் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார முரண்பாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நான் காட்டிக் கொடுக்கவும் இல்லை அதற்கு எதிராகச் செயற்படவும் இல்லை”…..

அங்கஜன் யார்? எந்தக் கட்சியின் சார்பாக அவர் தேர்தலில் நிற்கிறார்? அவருடைய கட்சிக்கும் இனப்பிரச்சினைக்கு எந்த சம்பந்தமும் இல்லையா? இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்தது அவருடைய கட்சி இல்லையா?

கிழக்கில் ஓரிடத்தில் கருணா கோட்டும் சூட்டுமாக நிற்கும் ஒரு படத்தின் கீழ் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்று எழுதப்பட்டு ஒரு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது அவர் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்த பொழுது தளபதியாக இருந்த ஜெயந்தன் படையணியின் இலட்சிய வாசகம் ஆகும். இங்கு கருணா கூறவருவது யாருடைய வெற்றியை?

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழும்; தென்னிலங்கை மைய கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகள் அல்லது தமிழ்தேசிய நிலைப்பாட்டுக்கு எதிரான கட்சிகள் தமிழ் தேசியவாதிகளின் கோஷங்களை முன்வைக்கின்றன. என்று சொன்னால் அதன்மூலம் அவர்கள் வாக்காளர்களை கவர நினைக்கிறார்களா? ஒரு கோஷத்தை முன் வைக்கும் அரசியல்வாதியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கக் கூடிய வேறுபாட்டை வாக்காளர்கள் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களா? அவ்வாறு கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களின் வாழ்க்கையும் செயலும் அமைந்து விட்டனவா? அதாவது தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும் தமிழித் தேசியவாதிகளல்லாத அரசியல்வாதிகளின் அரசியல் ஒழுக்கத்துக்கும்; இடையிலான வேறுபாடு சிறுத்துப் போய் விட்டதா?

ஒரு தேர்தல் கோஷம் எனப்படுவது வெறும் சொல்லு அல்ல. அது ஒரு மந்திரம்; அது ஒரு செயல்; அது ஒரு வாழ்க்கை முறை. அது இரத்தத்தினாலும் தசையினாலும் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு கட்சி அல்லது அமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டால் தியாகத்தால் உயிர் ஊட்டப்பட்ட ஒன்று. கட்சித் தியாகிகளின் பல வருடகால உழைப்பின் திரண்ட சொல். அவ்வாறு தன் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு அற்ற ஒரு அரசியல் வாழ்க்கையை கொண்டிருக்கக்கூடிய ஓர் அரசியல்வாதிதான் தன் வாழ்க்கையின் பிழிவாகக் காணப்படும் அல்லது அவருடைய வாழ்க்கையின் சாராம்சமாக காணப்படும் ஒரு கோஷத்தை முன் வைக்கும் பொழுது அதற்கு ஒரு உயிர் இருக்கும்; ;அதற்கு ஒரு செயல் வேகம் இருக்கும் ; அதற்கு ஒரு புனிதம் இருக்கும்; அதற்குள் ஒரு நெருப்பு இருக்கும். மார்க்சியவாதிகள் கூறுவதுபோல அந்தக் கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் சக்தியாக உருவெடுக்கும்.

ஆனால் தமிழ்த் தேசிய அரங்கில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்களுக்கும் சொற்களுக்கும் இடையே பாரதூரமான இடைவெளி உண்டு குறிப்பாக கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காணப்படும் கூட்டமைப்பு தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற தோஷங்களின் புனிதத்தை இல்லாமல் செய்து விட்டது. அதுமட்டுமல்ல விடுதலை சுதந்திரம் போராட்டம் போன்ற சொற்களின் புனிதத்தையும் அவர்கள் அழித்து விட்டார்கள். கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் எந்த ஒரு போராட்டத்தையும் அவர்கள் முன் நின்று நடத்தவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய போது அந்த போராட்ட கொட்டிலுக்குள் அவர்கள் போய் குந்தி இருந்தார்கள் என்பதே சரி.

அவர்கள் சுதந்திரம் என்று கருதும் ஒன்றுக்காக அல்லது விடுதலை என்று கூவித் திரியும் ஒன்றுக்காக அவர்கள் எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தார்கள் ? இக்கேள்விகளுக்கு துணிந்து பதில் சொல்லத்தக்க கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு ?

இதுதான் பிரச்சினை கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகளாக காணப்பட்ட கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இருந்த பாரதூரமான வேறுபாடு இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளும் தேசம் உரிமை என்றெல்லாம் கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறதா?

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சட்டச் செயற்பாட்டாளரான ஒரு புலமையாளர் சொன்னார்… “இம்முறை கூட்டமைப்பின் சுவரொட்டிகளையும் கோஷங்களையும் கவனித்தீர்களா? அவர்களில் அனேகமானவர்கள் தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற சொற்களை தவிர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னாரின் சாள்ஸ் நிர்மலநாதன் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட வேறு கோஷங்களை விரும்பி பயன்படுத்துவதாக தெரிகிறது” என்று. இருக்கலாம்; அவர்கள் அவ்வாறு பாவிப்பார்களாக இருந்தால் அது அந்த கோஷங்களுக்கும் நல்லது ; தமிழ் மக்களுக்கும் நல்லது. அதில் ஒரு நேர்மை இருக்கிறது. தாங்கள் வாழ்ந்து காட்டாத ஓர் அரசியலுக்கு உரிய கோஷங்களை அவர்கள் பயன்படுத்தாமல் விடுவது நல்லது.

விக்னேஸ்வரனின் கூட்டு தனது முதன்மைக் கோஷத்தை “தன்னாட்சி ; தற்சார்பு ;தன்னிறைவு” என்று மாற்றிக்கொண்டு விட்டது. ஏன் மாற்றியது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளும் ஒரு விடயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.; தாங்கள் முன்வைக்கும் கோஷங்களுக்கும் தமது செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என்பதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். செயலுக்கு போகாத கோஷங்கள் வெற்றுச் சொற்களே. கிலுகிலுப்பைகளே. அவை மக்களை செயலுக்குத் தூண்டுவதில்லை. சனங்கள் கோஷங்களைக் கேட்டா வாக்களிக்கிறார்கள்?

எனவே தாங்கள் செய்யாத ஓர் அரசியலை கோஷமாக முன்வைக்கும் தமிழ்க் கட்சிகள் அந்தச் சொற்களின் புனிதத்தை அழிக்கின்றன. மாறாக தாங்கள் முன் வைக்கும் இலட்சிய வாசங்களின்படி வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சொற்களுக்குச் சக்தி பிறக்கும். அவ்வாறு தாம் முன்வைக்கும் கோஷங்களுக்குத் தமது வாழ்க்கை முறையால் உயிரூட்டும் அரசியல் வாதிகள் யாருண்டு? மக்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்.

நிலாந்தன்