ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட நியூசிலாந்துவாசிகளில் ஒருவரான Raymond Elise, ஜூன் 18ம் திகதியோ அல்லது அதை ஒட்டிய நாளிலோ நாடுகடத்தப்படுவோம் எனக் கூறப்பட்டதாகவும் ஆனால் கொரோனா சூழல் நாடுகடத்தலை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தாங்கள் எப்போது நியூசிலாந்துக்கு அனுப்பப்படுவோம் என்று அறிய முடியாத நிலையில் இவர்கள் தடுப்பு முகாமில் இருக்கின்றனர்.
நியூசிலாந்து அரசு இந்த நாடுகடத்தலை தாமதப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது என Elise குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் தடுப்பு முகாமிற்கு வந்து செல்வதால் கிருமித்தொற்று எப்போது பரவும் எனத் தெரியவில்லை எனக் கூறுகிறார் Elise.
சில நாட்கள் கைக் கழுவுவதற்கான சானிடைசர் கூட தடுப்பு முகாமில் இல்லை, சமூக இடைவெளி கூட பின்பற்றப்படுவதில்லை என்கிறார் தடுப்பில் உள்ள மற்றொரு நியூசிலாந்துவாசியான Olive Smith.
நாடுகடத்தல் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து 3 பேர் நியூசிலாந்திற்கு திரும்பியிருக்கின்றனர் என நியூசிலாந்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள தகுதியுடைய நியூசிலாந்துவாசிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக நியூசிலாந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை சார்பில் கூறப்பட்டுள்ளது.
“நாடுகடத்தல் நடவடிக்கை நிகழாமல் அடுத்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறித்து விவாதிக்க இயலாது,” என ஆஸ்திரேலிய எல்லைப்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.