வடபகுதியில் இராணுவத்தினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் அதிகரிப்பு

தேர்தலுக்கு முன்னதாக வடபகுதியில் அதிகரித்த இராணுவபிரசன்னம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார்.

வடபகுதியில் படையினரை நிலைகொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேட்பாளர்களின் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்று வேட்பாளர்கள் செல்லவுள்ள இடங்கள் அவர்களின் கூட்டங்கள் இடம்பெறவுள்ள இடங்கள் குறித்த விபரங்களை சேகரிக்கின்றனா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்திஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் மாத்திரமே காவல்துறையினருக்கு தகவல் வழங்கவேண்டும் என்பது சட்டம் என சுட்டிக்காட்டியுள்ள ரட்ணஜீவன் ஹூல் ஆனால் புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணை செய்வது குறித்து கூட வெளியில் தெரிவிப்பதற்கு வேட்பாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் இராணுவத்தினர் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

ஜூலை ஐந்தாம் திகதி எங்களின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி இரண்டு தடவை தடுத்து நிறுத்தப்பட்டு வாகனத்தினை சோதனைக்கு காண்பிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டார் என ரட்ணஜீவன் தெரிவித்துள்ளார்.

அவர் அது குறித்து நண்பர்களிடம் தெரிவித்தார்ஹூல் ஆனால் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியவேளை அவர் அதனை நிராகரித்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கிளிநொச்சி செல்லும் வீதியில் அது இடம்பெற்றது என்பதை நான் உறுதிசெய்துள்ளேன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இவ்வாறே அச்சத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் இராணுவத்திர் கள்ளவாக்களித்தால் அவர்கள் எவ்வாறு வெளியில் தெரிவிப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.