உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைப் போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிக்கை கடிதம் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறும்போது, “ஒப்பந்தங்களை மீறுதல், அமைப்பிடமிருந்து விலகுதல் போன்றவை அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையைக் காட்டுகிறது. உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வ அமைப்பாகும். அமெரிக்காவின் விலகல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்குப் பரவியுள்ளது.
சர்வதேச அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. 3-வது இடத்தில் இந்தியாவும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. தென்கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.