பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்துக்கு இலக்கான உத்தியோகஸ்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்துக்குள் ஓடியுள்ளார்.
அதன் போதும், இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டதுடன் , வெளியில் வந்து , அவரது மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குல் மேற்கொண்டு அதனை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் , தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்ட செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் எனும் ரீதியில் காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையிலையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வன்முறை கும்பல் மோட்டர் சைக்கிள் வந்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.
தற்போது யாழ்ப்பாண காவல் துறை , மாவட்ட செயலக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.