கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே நோய் தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிடுமாறும் உலக சுகாதார நிறுவனத்துக்கு 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வருகிறது. இந்த கொடிய வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும்.
இது மனிதர்கள் தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் அடுத்தவருக்கு பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மேலும் தொற்று பாதித்தவர் பயன்படுத்திய பொருட்களை தொட்டு முகத்தில் தேய்ப்பதாலும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறியிருந்தது.
எனவே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக உலக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த தகவலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக, ‘கொரோனா குறித்த சமீபத்திய ஆய்வுகளில், அது காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் மக்கள் மீண்டும் மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், சந்தைகள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும்போது கொத்துக்கொத்தாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
எனவே இந்த நோய்த்தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிட வேண்டும்’ என அந்த கடிதத்தில் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘நோய் பரவலில் காற்று வழியான பரவல் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தால், குறிப்பாக மோசமான காற்றோட்டம் கொண்ட நெரிசலான இடங்களில் கட்டுப்படுத்துவதற்கான விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். சுகாதார பணியாளர்களுக்கு மிகச்சிறிய துகள்களையும் தடுக்கும் என்95 வகை முககவசம் தேவைப்படும். வீடுகளில் மிகச்சிறிய துகள்களில் மிதக்கும் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு புற ஊதா விளக்குகள் தேவைப்படலாம்’ என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.
மிகச்சிறிய துகள்கள் கூட மக்களை பாதிக்கும் எனக்கூறியுள்ள அவர்கள், இந்த ஆய்வு தொடர்பான தங்கள் அறிக்கையை அடுத்த வாரத்தில் வெளியிடப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
ஆனால் கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக விஞ்ஞானிகள் கூறுவதை நம்பமுடியாது என உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டின் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் டாக்டர் பெனிடெட்டா அலிகிரான்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘கொரோனா தொற்று காற்று மூலம் பரவுகிறதா? என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பாக வலுவான வாதங்கள் நடந்து வருகிறது’ என்று கூறினார்
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				