அடைக்கலம் வழங்க அவுஸ்திரேலிய அரசு பரிசீலனை!

சீன அரசின் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.

சீன அரசானது ஹொங்கொங்கிற்கெதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

இச் சட்டத்தின் மூலம் பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யவும் சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும்.

இச் சட்டத்தை எதிர்த்து, ஹொங்கொங்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு சீன அரசினுடைய இந் நடவடிக்கைகளுக்கு உலக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, அவுஸ்திரேலிய பிரதமர், ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பிரித்தானியாவைப் போலவே அவுஸ்திரேலியாவும் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் தருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

விரைவில் இதுதொடர்பாக அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுத்த பின்னர் முறையான அறிவிப்பை நான் வெளியிடுவேன். “ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.