இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகையில் வெறும் 5.7 சதவீதம் மாத்திரமே ஆகும். உலக அரங்கில் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகளாக தற்போது இருபதுக்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. அதிலும் கியூபா, பொலிவியா, உகண்டா போன்ற நாடுகளின் நாடாளுமன்றத்தில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான பெண் சனத்தொகை விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் இலங்கையானது 192 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் 182ஆவது இடத்தையே பெற்றிருப்பது வேதனைக்குரிய விடயம்.
உலகில் முதலாவது பெண் பிரதமரை மட்டுமன்றி, ஒரு பெண் பிரதமரைத் தொடர்ந்து நேரடியாக மற்றொரு பெண் பிரதமரைப் பெற்றிருந்ததும், மேலும் ஒரு பெண் பிரதமரையும் ஒரு பெண் ஜனாதிபதியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்ததுமான முதல் நாடாகவும் இலங்கை இருந்து வருகிறது.
நாட்டின் தலைமைப் பொறுப்புத் தவிர, இதுவரை பல பெண் அமைச்சர்களைக் கண்ட அமைச்சுகளாக சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மட்டுமன்றி கல்வி அமைச்சு, மீன்வள அமைச்சு, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு, கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு போன்றவையும் உள்ளடங்குகின்றன.
இவை தவிர நாட்டின் மிக முக்கிய கட்டமைப்புகளான பாதுகாப்பு அமைச்சு, பெற்றோலிய வளங்கள் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சு போன்றவற்றிலும் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தவிர்த்து பவித்திரா வன்னியாராச்சி, ஐரீன் விமலா கண்ணங்கரா போன்ற பெண்கள் பலமுறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
இவை நாடளுமன்றத்தில் சொற்ப ஆசனங்களையே பெற்றிருப்பினும் தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கக்கூடிய திறமை மிக்க பெண்களை இந்த நாடாளுமன்றங்கள் கொண்டிருந்தமையை நிரூபணம் செய்கின்றது.
எனினும் இந்தப் பட்டியலில், நாட்டின் சனத்தொகையின் கால்வாசி அளவைக் கொண்டிருக்கும் சிறுபான்மையினங்களிடையே பெண் அமைச்சுப் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
2000ஆம் ஆண்டில் கால்நடை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாடு அமைச்சராகப் பதவிக்கு வந்த சிறுபான்மையின பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் அவர்கள், தொடந்து 2004இல் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் தொழிலமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். சமீபகாலங்களில் தேசிய கட்சிகள் மூலமாகவே வடக்கில் விஜயகலா மகேஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்றிருந்தது.
வடக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுப்பதை சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுப்பதாகக் கருதிப் புறக்கணிப்பதாக இருப்பினும் ஒருவேளை அவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியேற்கவேண்டி ஏற்படின் கூட பெண்களை முன்னிலைப் படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே.
முப்பது வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்துடனேயே தொடந்து பயணித்து வரும் சில மலையக அரசியல் தலைமைகள் கூட பெண்களின் பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அசமந்தப் போக்கையே இன்றுவரை காண்பித்து வருகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக இம்முறை தேர்தலில் நிற்பதற்கான சகல தகுதிகள் இருந்தும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மகளுமாகிய சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனைக் குறிப்பிட முடியும்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரான சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டமைக்குக் காரணமாக, குறித்த கட்சி இம்முறை தேசிய கட்சியொன்றுடன் இணைந்து போட்டியிடுவதால் ஆசனப் பகிர்வு சிக்கல்களால் இவரை, வரும் மாகாண சபைத்தேர்தலில் நிற்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அரசியலுக்குள் நுளைய நினைக்கும் பெண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக அவர்கள் சாதாரண உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர், பின்னர் மாகாண சபை என்று படிப்படியாக முன்னேறாமல் எடுத்தவுடனேயே நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வேண்டும் என ஆசைப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால், இதுவரை பிரதேச சபை, மாகாண சபை என்று படிப்படியாக வளர்ந்து வரும் எத்தனை பெண்களுக்கு வடக்கில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது?
அங்கே ஒவ்வொருமுறையும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குகிறோம் என்றுவிட்டு சாட்டுக்காக அறிமுகப்படுத்தப்படும் பெண்கள் எல்லோருமே தேர்தல் காலத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் திடீரென இறக்குமதி செய்யப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் ஏதோ பேருக்கு நாலு பிரசாரங்களைச் செய்துவிட்டு தம்மைப் பரிந்துரைசெய்து, அரசியலுக்குக் கொண்டு வந்தவர்களுக்கான விருப்புவாக்குகளை மாட்டும் பெற்றுக்கொடுத்துவிட்டு அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடுகிறார்கள்.
இதில் சென்றமுறை வட மாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றிருந்த அனந்தி சசிதரன், கூட்டமைப்பானது தன்னை வெறும் வாக்குச் சேர்ப்பதற்காக மட்டுமே பாவித்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும் இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சி கூட பெண்களை தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்த மட்டுமே பாவிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மற்றக் கட்சி வேட்பாளர்களை விடவும் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான உமா சந்திரபிரகாஷ், தான் யாழ். மண்ணின் புதல்வி என்பதை நிரூபிக்கவும் வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கும் நிறையவே பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. இருப்பினும் வடக்கில் வேறெந்த புதுமுக பெண் வேட்பாளர்களை விடவும் சிறந்த திட்டமிடல்களையும் ஆணாதிக்க அரசியலை கேள்விக்குட்படுத்தக்கூடிய சிறந்த ஆளுமையையும் கொண்டிருப்பதாகவே உமா சந்திரபிரகாஷ் தெரிகிறார்.
காலாகாலமாக தமிழர்கள் மத்தியில் அரசியல் என்பது ஆண்களுக்கே வரிந்துவிடப்பட்டதாகக் கருதப்படும் சூழ்நிலையில் துணிந்து களமிறங்கும் பெண்களின் மீது அவர்களது நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் முகமாகச் சேற்றை வாரியிறைக்கும் செயல்கள் தொடர்ந்தும் அரங்கேறுவதும் வேதனைக்குரிய விடயம்.
இத்தகைய சேறுபூசல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தொடக்கம் வேட்பாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் சமர்ப்பித்திருந்த மட்டக்களப்பின் நளினி இரட்ணராஜா வரை நீண்டு செல்கிறது.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் துணைவியாகிய சசிகலா ரவிராஜ் தனது பிரசாரங்களில் புலிகளால் ரவிராஜுக்கு வழங்கப்பட்ட ‘மாமனிதர்’ பட்டத்தைப் பயன்படுத்தினார் என்பதற்காக மாற்றுக் கட்சி உறுப்பினர் ஒருவரால் “அரசியலில் இறங்க முதல் உங்கள் கணவரின் நினைவுச் சிலையில் மாமனிதர் என்ற கௌரவத்தினை பொறியுங்கள். அது செய்ய வக்கில்லை. தூ.. பிறகு அரசியல் கதைக்கிறாவாம். இதைவிட உடுப்பில்லாமல் திரியலாம். அதுமேலானது” என்றவாறாக மிகவும் கீழ்த்தரமாக, விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோலவே நளினி இரட்ணராஜாவின் நடத்தையும் இன்றுவரை மிகவும் கீழ்த்தரமான முறையிலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னாலிருக்கும் ஆணாதிக்க மனோ நிலையானது பெண்கள் எவரையும் தேர்தல் களத்துக்கு வரவிடாமல் செய்வதனையே பிரதான குறிக்கோளாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனாலேயே சில ஆளுமை மிக்க பெண்கள் கூட தேர்தல் களத்துக்கு வர அஞ்சி, தேசியப்பட்டியலை விரும்பிச் செல்வதற்குக் காரணமாகிறது.
இன்னும் சில இடங்களில் பெண்களை வேட்பாளராகக் களமிறக்கினாலும் முன்னிலையில் சென்று பேசுவதற்குத் தடுக்கப்படுகிறார்கள் அல்லது தயக்கம் காட்டுகிறார்கள். அத்தகைய பெண்களின் குரலாக ஆண்களே இவர்களுக்கும் சேர்த்து பேசிவிட்டுச் செல்கிறார்கள். இதனை கிழக்கின் ஒரு முன்னிலைக் கட்சியின் கூட்டங்களில் காணமுடிகிறது. ஆனால், ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் மங்களேஸ்வரி சங்கர் ஓரளவு தனித்துவத்துடன் தெரிகிறார்.
தேர்தல் களத்தில் பெண்கள் மீதான இத்தகைய சவால்களையெல்லாம் துடைத்தெறியக்கூடிய ஆளுமை மிக்க பெண்களாகவும் வெற்றி மீதான ஓர்மமுள்ள பெண்களாகவும் இனி அரசியலுக்கு வரத்துணியும் பெண்களுக்கான சிறந்த வழிகாட்டிகளாக அமையக்கூடிய பெண்களாகவும் இம்முறை தேர்தல் களத்தில் இரு தமிழ்ப் பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒருவர் மலையகத்தின் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் மற்றையவர் வடக்கில் உமா சந்திரபிரகாஷ்.
இவர்கள் இருவரிடத்திலும் தாம் சார்ந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் புரிகிறது, அவற்றைச் சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்து அவற்றுக்குத் தம்மால் முன்வைக்கப்படும் தீர்வுகளைப் பற்றியே தமது பிரசாரங்களில் அதிகமாகப் பேசுகிறார்கள்.
குறுகியகாலத்தில் அடைய முடியாத தீர்வுத்திட்டங்களையும் பிறர் மீது பழிசுமத்தும் அரசியலையும் மட்டுமே இதுவரைகாலமும் செய்து வந்த பல அரசியல்வாதிகளுக்கு இவர்களின் இந்தப் புதிய அணுகுமுறை மாபெரும் அடியாக இருக்கிறது.
கூரையேறிக் கோழிபிடிக்க முடியாதவர்கள் எல்லாம் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்பதில் அர்த்தமில்லை. ஒரு பெண்ணுக்குத்தான் குடும்பத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் என்னவென்று புரிந்துகொள்ள முடியும், சாதாரண மனிதர்களின் அபிலாசைகளைத் தீர்த்துவைக்க முடியும். இந்தவகையில் மேற்குறிப்பிட்ட இரு பெண்கள் முன்மொழியும் திட்டங்களும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லும் பொறிமுறைகளும் செயற்பாடுகளும் எளிதானவையாகவும் மெச்சத்தக்கனவையாகவும் இருக்கின்றன.
இவ்விரு பெண்களும் இம்முறை தேர்தல் களத்தில் துணிச்சலுடன் எதிர்கொள்வது, பல தாசாப்தங்களாக ஆசனத்தை விட்டகலாத பலம் மிக்க அரசியல் முதலைகளையேயாகும். இருப்பினும் அந்த அரசியல் முதலைகளால் இவர்கள் மீது வைக்கக் கூடிய அதிகபட்ச பழி சுமத்தலே திருமணம் செய்த பின்னரும் தனது கணவனின் பெயரைப் பயன்படுத்தாமல் தந்தையாரின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டிருகிறார் என்பதும், வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுவும் மட்டுமே.
ஒரு பெண் தனது பெயருடன் தந்தையின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது கணவனின் பெயரைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது தாயின் பெயரைப் பயன்படுத்தவேண்டுமா என்பது அந்தப் பெண்ணின் சுதந்திரம். இந்த அடிப்படைச் சுதந்திரத்தைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தந்து விடுவார்கள் என்று நினைப்பது அடிமுட்டாள்தனம்.
ஐம்பத்தியாறு சதவீதத்துக்கு மேற்பட்ட பெண் வாக்காளர்களை இலங்கை கொண்டிருக்கூடியபோதிலும், இன்றுவரை ஆறு சதவீதத்துக்கும் குறைவான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மட்டுமே பெண்கள் கொண்டிருப்பதற்கு நிச்சயமாக பெண் வாக்காளர்களைத் தான் குறைசொல்ல வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்பட்டபோதிலும், அரசியலில் பெண்களின் பங்களிப்பு தேக்கமடைந்துள்ளமைக்கான காரணமாகவும் பெண் வாக்காளர்களே இருக்கிறார்கள்.
எனவே இம்முறை ‘குறிப்பிடத்தக்களவு விகிதாசாரத்தில் பெண்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பெண் வாக்காளர்களாகிய எமக்குப் புரிகிறது’ என்பதையும் அனைவருக்கும் உரத்துச் சொல்வதற்காகவேனும் ஒரு பெண் வேட்பாளருக்கு தமது வாக்கைக் கட்டாயம் அளித்தே தீரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
புலிகள் உருவாக்கினார்கள் என்பதற்காக இதுநாள்வரை ஒரு கட்சிக்கு வாக்குப் போட்டுக்கொண்டிருந்த மக்களுக்குத் தற்போது அதனைக் கூட ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று குறித்த தலைமைகள் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்பவர்களாக இருக்கிறார்கள். தாம் காலம் காலமாக ஆசனத்தில் இருப்பதற்காக வெளியே ஒன்றையும் பின்னர் தேர்தல் காலத்தில் மக்களுக்கேற்றவாறு இன்னொன்றையும் திரித்துக் கூறக் கூடியவர்களை மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி ஏதாவது கிடைத்துவிடும் என்று காத்திருப்பதை விடுத்து மக்களது அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு புதிய தலைமுறையை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது. எனவே, இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் பெண் வேட்பாளர்களை, ஆண் பிரதிநிதிகளால் வசைபாடப்படுவதைப்போல, மக்களின் வாக்குகளைப் பிரிக்க வந்தவர்களாகப் பார்க்காமல், இவர்கள் அனைவரும் ஆணாதிக்க அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்பதைத் தெளிவுறப் புரிந்துகொண்டு, தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் இம்முறை பெண்களுக்கு வழங்கி வெற்றிபெறச் செய்வதே இனிவரும் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் பெண் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவமளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும்.
தவிர, இம்முறை களமிறங்கியிருக்கும் பெண் பிரதிநிதிகளும் சிறந்த ஆளுமை கொண்டவர்களாகவும் தாம் செய்வோம் என வாக்குக் கொடுப்பதைச் செய்யக்கூடிய தற்றுணிவுடையவர்களாகவும் தெரிகிறார்கள். இவர்கள் வேறுவேறு கட்சிகளிலும் சுயேட்சையாகவுமே தேர்தல் களத்தில் இறங்கியிருந்தாலுமே தமக்கான வாக்காளர் பகுதிகளை ஒருவருக்கொருவர் பாதிப்பேற்படுத்தாத வகையில்தான் தேர்வு செய்து பிரசாரங்களை மேற்கொண்டுவருகிறார்கள் என்பது கவனத்துக்குரியது.
எனவே, மக்கள் நினைத்தால் இம்முறை வழமையைவிட அதிக பெண் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது வருங்காலங்களில் பிரதான தமிழ்க் கட்சிகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும் தனித்துக் களத்தில் இறங்கக் கூடிய உத்வேகத்தைப் பெண்களுக்கு வழங்கும். இல்லாதுவிடின் சிறுபான்மையினரின் அரசியலில் பெண் தலைமைத்துவம் என்பதும் சிறந்த பெண் ஆளுமைகளது உருவாக்கம் என்பதும் இனிவரும் கால் நூற்றாண்டுக்குக் கூட சாத்தியப்படாத ஒன்றாகவே ஆகிவிடும்.
-கௌரி நித்தியானந்தம்