தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் அதனூடாகத் தமது செயற்பாடுகளின் உறுதிமொழிகளும், தாராளமாகவே அள்ளிவீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் தேர்தலொன்று, சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு மத்தியிலும் தொற்று நோயொன்றின் அச்சுறுத்தலுக்கு இடையிலும், முதன்முதலாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவானது, இந்தத் தேர்தலை நடத்திவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றது.
தேர்தலுக்கான ஒத்திகையிலேயே நீண்ட நாள்களைச் செலவிட வேண்டிய தேவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலுக்கான முனைப்பு காணப்படுகின்றதா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.
வடபுலத்தை நோக்குகையில், நீண்டகால அரசியல் செயற்றிறனில் ஏற்பட்ட அதிருப்தி, மக்கள் பிரதிநிதிகளாக அனுப்பிப் பலரும் தமது முன்னேற்றத்தையும் பதவி இருப்பிலும் கொண்ட பற்று என்பன, மக்கள் மத்தியில் அரசியல் என்ற தளத்தை வெறுப்புணர்வோடு பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.
ஆயுதப் போராட்ட மௌனிப்பின் பின்னரான காலத்தில், மக்கள் மத்தியில் எஞ்சியிருந்த அபிலாசைகளைத் தீர்க்க முடியாத அரசியல் தலைமைகள், 11 ஆண்டுகள் கடந்தும் எவ்வித ஆக்கபூர்வமான அழுத்தங்களையும் பிரயோகிக்காமை, கடந்து வந்த நல்லாட்சி அரசாங்கத்துக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கொடுத்து வந்த ஆதரவும், அனூடாக எதனையும் சாதிக்க முடியாமல் போனமையும், அரசியல் வெறுமைக்கான காரணங்களாக உருவாகிக்கொண்டன.
தமிழர் தரப்பு அரசியல் என்பது, நிறைந்த தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவைகளுடன் காணப்படும் நிலையில், மாகாண சபையில் ஒருவரை ஒருவர் குறைகூறுவதும் ஊழல் நிறைந்ததாகவும் காணப்பட்டிருந்தது. இச்சூழலில், தமிழ் அரசியலாளர்கள், ஆளுமைத் தன்மை அற்றவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையிலேயே மீண்டும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மக்கள் முன் வந்துள்ளது.
எந்தக் கட்சியைத் தெரிவுசெய்வது என்பதற்கப்பால், எவர் மக்களுக்கான இன்றைய அத்தியாவசியத் தேவைகளைப் பூரணப்படுத்தக்கூடிய வல்லமையுடன் உள்ளார் என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது.
இவ்வாறான நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கிடையில் கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், கட்சிகளுக்குள்ளேயும் ஒருவரையொருவர் வீழ்த்திவிட வேண்டும் என்ற சதுரங்க விளையாட்டும் ஆரம்பித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மற்றும் ஆசனப் போட்டி என்பது, தமது கட்சிக்குள்ளேயே வேட்பாளர்களைக் குற்றஞ்சுமத்தியும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியும் வாக்குச் சேகரிக்கும் நிலை உருவாகியுள்ளமை, தமிழர் அரசியலின் இருப்பு, கீழ் நோக்கிச் செல்வதன் வெளிப்பாடாகும். இதற்குமப்பால், நீண்ட காலமாக நாடாளுமன்ற ஆசனத்தை அலங்கரிப்பவர்கள், இன்று இளம் வேட்பாளர்களை ஓரங்கட்டி, மீண்டும் தமது நடாளுமன்றப் பிரவேசத்துக்கான முனைப்பை வெளிப்படுத்துவதானது, தமிழர்களின் பலம் எனக் கருதப்பட்டு வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை, இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வடபுலத்தில் களமிறங்கியுள்ள தென்பகுதியைச் சேர்ந்த கட்சிகளும் வேட்பாளர்களும், தமிழர்களின் வாக்குப் பலத்தை எவ்வகையிலும் உடைத்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டும் நிலையில், தமிழ்க் கட்சிகள், தமக்குள்ளேயே முட்டிக்கொள்ளும் செயற்பாடுகள், அவர்களுக்கு மேலும் வாக்குகளை உடைப்பதற்கு இலகுவாகிவிடும் என்பதே யதார்த்தம்.
இதற்குமப்பால், வடக்கில் களமிறங்கியுள்ள கட்சிகள் அனைத்துமே, மக்களுக்குச் சிறந்த செயற்பாட்டு வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது, அவர்களால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது என்ற கருத்துகளையே கூறி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனரே தவிர, தாம் எதிர்வரும் 5 வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அபிலாசைகளுக்கு தீர்வாக எதனைச் சாதித்துக் காட்டப்போகிறோம் என்ற கருத்துகளை முன்வைக்கத் தவறி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தேர்தல் களத்தைப் பார்க்கின்ற போது, தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆதரவுடன் காணப்படுவதாகவும் அதை எவ்வாறு உடைத்தெறிவது என்ற சிந்தனா சக்தியையே முடுக்கி விட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது.
குறிப்பாக, தமிழ் மக்களுக்குக் காணப்படும் பொது எதிரியான மத்தியில் உள்ள அரசாங்கம் மீதான அழுத்தங்களைக் கொடுப்பதை விடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதே பிரயோக்கிக்கப்பட்டு வருவதானது, தமிழ்க் கட்சிகளுக்கிடையில் காணப்படும் பலவீனமா அல்லது தாம் அழுத்தம் பிரயோகித்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெறும் விடயம் தொடர்பில் தெளிவின்மையா என்பதைச் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
தேர்தல் பிரசார யுக்தியில் அமைந்துள்ள வாக்களிப்பு வீதமானது, கூட்டமைப்புக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் சரிவை ஏற்படுத்தினாலும் கூட, வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்கைப் பெறப்போவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது உண்மை. எனினும், கூட்டமைப்புக் கட்சியானது, தான் கடந்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்வரும் காலத்தில் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்கவில்லையாயின், தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமக்கான அடுத்த தலைமையை, பொதுத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளால் தேர்ந்தெடுக்க எத்தனிப்பார்கள்.
ஆகவே, தற்காலச் சூழலில், கூட்டமைப்புக்கு நிகரான மாற்றுத் தலைமை என்பது எதுவென்ற கேள்வி நிறைந்துள்ள நிலையில், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் போட்டி நிலை உருவாகியுள்ளது. எது எவ்வாறாயினும், நடைபெறவுள்ள தேர்தலே, கூட்டமைப்பை வெறுக்கின்ற மக்கள் தமக்கான அடுத்த தலைமையின் உருவாக்கத்தை எங்கிருந்து விரும்புகின்றனர் என்ற செய்தியைச் சொல்லப்போகின்றது.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவல்ல களமொன்று உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியானது, மத்திய அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பரசியலால் சாதித்துக்கொள்ள முடியாது என்பதே யதார்த்தம். ஆகவே, பொருளாதார மேம்பாட்டுடனான சமூகமாகத் தமிழ் மக்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளவர்களுக்கு முன்னுள்ள சவால் ஆகும்.
குறிப்பாக, தமிழ் மக்களையும் விட சிறுபான்மையினரான இஸ்லாமியர்களது பொருளாதார நிலையுடன், ஒப்பீட்டு ரீதியலான பொருளாதாரப் பெருக்கத்தைக் கொண்டுவர முயற்சிக்காது, வெறுமனே தேசியம் சார் கருத்துகளால் சாதித்துக் கொள்ளப்போவது என்னவென்ற கேள்வி, மக்கள் மத்தியில் மெல்ல வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளது.
இறுதி யுத்தம் இடம்பெற்று 11 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு, இதுவரை அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் முழுமை பெறாத வீட்டுத்திட்டங்களுமே எஞ்சியுள்ள போது, இம்மக்களின் வாக்குகள் யாருக்காக வழங்கப்பட வேண்டும் என்ற தேடலில் தற்போதும் உள்ளனர்.
இந்நிலையிலேயே, ஓகஸ்ட்டில் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவர் சாலச்சிறந்தவர் என்பதை, மக்கள் தீர்க்கமாக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களும், அதற்கு ஏற்றாற்போல மிகத் தெளிவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறியுள்ளமையும் மறுக்க முடியாத சூழலிலேயே, வேட்பாளர்கள் சிந்தித்து, தமது வாக்குறுதிகளையும் இயலுமைகளையும் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
–க. அகரன்