அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே!
எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
கடந்த ஏழு தசாப்பதங்களாக இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு முகம்கொடுத்துவரும் எமது மக்கள் அந்த அழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள். குறிப்பாக கடந்த 2009 வரையான மூன்று தசாப்பதங்களாக அதி உச்ச அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்துள்ளதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் சர்வதேச கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் பணயத்தில் ஒரு திருப்புமுனையாகவே இருக்கப்போகின்றது. தமிழ்த் தேச அரசியலானது எங்கள் அடிப்படை உரிமைகளையும் அபிலாசைகளையும் நோக்கி பயணிக்கப்போகின்றதா? அல்லது இத் தேர்தலோடு – தமிழ் மக்கள் 70 வருடங்களாக தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் உரிமைகளையும் அபிலாசைகளையும் கைவிடச் செய்து ஒற்றையாட்சிக்குள் முடக்கப்படப்போகின்றதா? என்பதையே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எழுத்து மூலமான சம்மதத்துடன், மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் அரசியல் யாப்புப் பேரவை மூலம், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளித்த – இறைமை பகிரப்படமுடியாத – மற்றும் இறைமையை பராதீனப்படுத்த முடியாத, ஒற்றையாட்சி (ஏக்கிய இராச்சிய) அடிப்படையிலான – அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையை தமிழர்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வாக எம்மைத் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியற் கட்சிகள் அனைத்தும் ஏற்று சம்மதம் தெரிவித்துள்ளன. தற்போதய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அணி என்ற கோசத்துடன் எமக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள திரு.சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தரப்பினரும் கடந்த 2019 ஒக்டோபர் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆறு தமிழ் அரசியல் கடசிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டு முயற்சியின்போது மேற்படி புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்க முடியாதெனவும், அந்த வரையின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் தீர்வு அமைய வேண்டுமெனவும் உறுதிபட தெரிவித்திருந்தமையையும் நினைவூட்ட விரும்புகின்றோம். தமிழினப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாக அமையமுடியாத –- ஒற்றையாட்சியைக் கொண்ட இந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட மீள முடியாத விளைவை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என நாம் ஆராய வேண்டிய இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
மேற்படி ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையை, பாராளுமன்றத்திலுள்ள தமிழ்ப் பிரதிநிதிகளின் அனுசரணையுடன் எமது மக்கள் மீது திணிக்கும் ஏமாற்று முயற்சியை அம்பலப்படுத்தி, அது ஒருபோதும் தமிழர்களுக்குரிய தீர்வாக அமையப்போவதில்லை என்ற உண்மையை எமது மக்களுக்கு நாம் தெளிவுபடுத்தியே வருகின்றோம். அதேவேளை, தமிழ்த் தேசமும், அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான, தீர்வை அடைவதற்காக, எவ்வித விட்டுக்கொடுப்புமில்லாமல், தொடர்ச்சியாக போராடுகின்ற ஒரேயொரு அரசியல் இயக்கமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மட்டுமே செயலாற்றிவருகின்றோம்.
பிரித்தானியர் இலங்கைத்தீவை விட்டு வெளியேறிய நாளிலிருந்து – இலங்கையிலே மூன்று தடவைகள் அரசியலமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சிங்கள பௌத்த ஆட்சியை பிரதிபலிக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற காரணத்தை முதன்மைப்படுத்தியே, தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களும், இந்த மூன்று அரசியலமைப்புக்களையும் எதிர்த்து வந்துள்ளனர்.
நாட்டின் பிரதான சட்டமாக இருக்கக்கூடிய அரசியல் யாப்பை – நாட்டில் வாழும் குறித்த ஒரு தேச மக்கள், நிராகரித்ததன் மூலமே, இலங்கையிலே ஒரு இனப்பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்டு, அந்த இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வகையிலான தீர்வு அமையவேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றது. ஆனால் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இராஜபக்ச தரப்புடன் இணங்கியுள்ளவாறு, புதிய அரசியலமைப்பானது – தமிழ்க் கட்சிகளதும், மக்களதும் ஆதரவைப்பெற்று நிறைவேற்றப்படுமானால், இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டது என்ற மாயையே உருவாக்கப்படும். அவ்வாறான நிலை ஏற்படுவதானது தமிழ் இனத்தின் இருப்புக்கு ஒருபோதும் மீள முடியாத பேரழிவையே ஏற்படுத்தும்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலைக்கு, சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையே வேண்டுமென வலியுறுத்தும், தமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு மாறாகவே, தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா வரை சென்று செயற்பட்டுவருகின்றமையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
ஒருவேளை – இந்தத் தேர்தலின் முடிவுகள் எமது அரசியல் இயக்கத்திற்குப் பாதகமாக அமையுமானால் தமிழ் மக்கள் இன்றுவரை தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசம், இறைமை ஆகிய உரிமைக் கோரிக்கைகள் கைவிடப்பட்டு, 70 ஆண்டுகள் வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள பௌத்த மேலாதிக்கத்தனமான ஒற்றையாட்சி முறையை தமிழர் விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும், தமிழரின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறி தமிழரின் அரசியல் ஒற்றையாட்சிக்குள்ளேயே முடக்கப்படும். இந்நிலை தடுக்கப்பட வேண்டுமானால் எமது அணி பெருமளவு மக்களாதரவுடன் அதிகளவு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
கடந்த 2009ற்கு முன்னர் தமிழர் தாயகத்தில் நடைமுறை அரச நிர்வாக கட்டமைப்புக்களை நிறுவி, மக்களின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதாரப் பங்களிப்பு அதி உச்சமானதாக இருந்தது. அதன் பின்னரான 10 ஆண்டுகளில் இனவழிப்யு யுத்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரப் பங்களிப்பினை புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். அண்மையில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட்-19 பேரனர்த்தத்தின்போது தொழில் வாய்ப்புக்களை இழந்து வீடுகளுக்குள் முடங்கியிருந்த தாயகத்து மக்களுக்கு பேருதவி புரிந்திருந்தனர். அதன் மூலம் பெரும் பட்டினிச்சாவு தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எமது அரசியல் இயக்கம் மக்களின் ஆணையை பெருமளவில் பெற்றுக்கொள்ளும்போது புலம்பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகவும், இனப் படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி விசாரணைக்காவும், தாயகத்தின் பொருளாதார மேம்பாடு, இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு, போரால் பாதிக்கப்பட்ட மக்களதும், முன்னாள் போராளிகளதும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களதும் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், உள்ளிட்ட வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லும்;.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரிகளே இன்று சிறிலங்காவின் அரச அதிகாரத்தில் மீண்டும் அமர்ந்துள்ளனர். இந்தக் களநிலைமையை புரிந்து கொண்டு எமது அரசியல் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து எம் கரங்களைப் பலப்படுத்த வேண்டுமென அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற எமது அரசியல் இயக்கமானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது. எமது அணியின் கொள்கை நிலைப்பாட்டைப் பலப்படுத்த, தமிழ் இனம் தனது வரலாற்றுக் கடமையை ஆற்றும் வகையில் உங்கள் தார்மீக ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
தமிழ்த் தேசம் மீண்டும் பேரெழுச்சி கொள்ளும்.