வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்றையதினம் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் காவல் துறை மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு இனம்தெரியாத நபர் ஒருவர் அண்மையில் வருகைதந்த விடயம் தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினர் மற்றும் காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இவ்விடயத்தினை கருத்தில் கொண்டும் இன்றையதினம் ஞாயிறு ஆராதனையை முன்னிட்டு அதிகமான பொதுமக்கள் ஆலயங்களிற்கு வருகைதரும் நிலையில் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயங்கள் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது இன்றையதினம் ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகமான மக்கள் தேவாலயங்களிற்கு வருகைதருவர். அதன் நிமிர்த்தம் தேவாயலங்களிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுகின்றது.
மாறாக வெடிகுண்டு மிரட்டல்கள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்
Eelamurasu Australia Online News Portal