ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொண்ட சதிந்தரும் இந்தியாவில் உள்ள அவரது கணவரான சுமித்தும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது Partner விசாவுக்கான விண்ணப்பம் ஆஸ்திரேலியாவில் நிராகரிக்கப்பட்டு இருப்பதால், இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களது குடிவரவு வழக்கறிஞராக செயல்படுபவர் யுன் சென்.
சதிந்தர்- சுமித்திற்கு திருமணமான போதிலும், இவர்கள் பேஸ்டைம், இன்னும் சமூக ஊடகங்கள் வழியாக உரையாடிக் கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ள போதிலும், இவர்களுக்கு இடையிலான உறவு உண்மையானதல்ல என அவர்களது Partner விசா ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் Yunn Chen. இப்படி நிராகரிக்கப்பட்ட தகவலை சதிந்திரடம் பகிர்ந்து கொள்ள மிகவும் கடினமானதாக இருந்ததாகக் கூறும் யுன் சென், இந்த நிலை அவரை மனதளவில் பெரிதும் பாதித்தாகக் கூறுகிறார்.
சுமார் 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் குடிவரவு வழக்கறிஞராக உள்ள யுன் சென், குடிவரவுத்துறை என்பது மிகவும் சிக்கலான, சட்டங்கள் அடிக்கடி மாறக்கூடிய துறை எனக் குறிப்பிட்டுள்ளார். துறைச் சார்ந்த பிரச்னைகளை கையாள்வதுடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர எண்ணும் மக்கள் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தையும் ஒரு வழக்கறிஞராக கையாள வேண்டும் எனக் கூறுகிறார் யுன் சென்.
தற்போது இவரும் குடிவரவுச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இவருடைய கட்சிக்காரர்களும் (Clients) சந்திக்கும் சவால்கள் ஆஸ்திரேலிய ஊடகமான எஸ்பிஎஸ்-ன் ஆவணப்பட தொடரில் ‘Who Gets To Stay?’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்வதில் சட்ட ரீதியாக நடைமுறையில் சிக்கல்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.
ஒரு நாட்டிற்கு புலம்பெயர்வதில் குடிவரவு சிக்கல்களை சமாளிப்பது என்பது தினசரி காத்திருத்தல், அச்சம், மன நலன் பாதிப்பு சமாளிப்பதாகும் என்கிறார் யுன் சென். அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என அறியாத இப்படியான மக்கள், குடும்பம் சார்ந்தோ பணி சார்ந்தோ எந்த திட்டமிடலையும் செய்ய முடியாத என்றும் அவர்களது வாழ்க்கை குடிவரவுத்துறையின் முடிவினை பொறுத்தே உள்ளதாக தெரிவித்திருக்கிறார் யுன் சென்.