மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்னுடனும் மற்றும் அனைவருடனும் சிரித்த முகத்துடனும் பண்பான இயல்புகளுடனும் உறவாடிய அன்பர் இராஜநாயகம் இராஜேந்திரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
அவரை, இறுதியாக கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற நடன ஆசிரியை திருமதி அகிலா விக்னேஸ்வரனின் நடனப்பள்ளியின் ( Narthana Sorubalaya Classical Dance – NSCD ) மாணவர்களின் வருடாந்த நடன ஆற்றுகையின்போது சந்தித்து உரையாடியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.
எங்கே காண நேர்ந்தாலும், எனது எழுத்துக்கள் பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை அவர் சொல்வதற்கு தவறுவதில்லை. அவர் சிறந்த தமிழ் கலை, இலக்கிய பற்றாளர் என்பதை அவரது உரையாடலிலிருந்து தெரிந்துகொள்ளமுடியும்.
அவர் முகநூலிலும் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிடுபவர் என்று, எனது நண்பர்கள் சொல்லி அறிந்துள்ளேன். என்வசம் முகநூல் இல்லாதமையால் அதுபற்றி வேறு எதுவும் மேலதிகமாக என்னால் சொல்ல முடியவில்லை.
மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலப்பகுதியில் 1989 ஆம் ஆண்டு, நண்பர் இராஜரட்ணம் சிவநாதனின் ஏற்பாட்டில் தமிழ்க்கலை மன்றத்தினால், பார்க்வில் பல்கலைக்கழக உயர்தரக் கல்லூரியில் ஒரு நவராத்திரி காலத்தில் கலைமகள் விழாவை நடத்தினோம்.
அக்காலப்பகுதியில் மெல்பனுக்கு என்னைப்போன்று வருகை தந்திருந்த கலை ஆர்வம் மிக்க இளைஞர்கள், கலையும் கண்ணீரும் என்ற நாடகத்தை அவ்விழாவுக்காக மேடையேற்றத் தயாரானார்கள் அதில் ஒரு பரத நாட்டியம் இடம்பெறவேண்டிய காட்சியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ற நடனம் நன்கு தெரிந்த ஒரு இளம்பிள்ளை தேவைப்பட்டது.
இதுபற்றி எமது இலக்கியச் சகோதரி திருமதி அருண் விஜயராணியிடம் நாம் சொன்னபோது, அவர் தனது சகோதரியின் மகள் செல்வி வாசுகி இராஜரட்ணத்தை எமக்கு அறிமுகப்படுத்தினார்.
இவரை இலங்கையிலும் அறிந்திருந்தேன். இலங்கையில் மிகவும் பிரபலமான நடன நர்த்தகி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியாக ஏற்கனவே நடனப்பயிற்சி பெற்றிருந்தவர். இரண்டு வாசுகிகளையும் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்த நடன ஆற்றுகையில் பார்த்துவிட்டு வந்து வீரகேசரியிலும் எழுதியிருக்கின்றேன்.
மெல்பன் நண்பர்களின் நாடகத்தின் கதைக்கு ஏற்ப, யாராவது தேர்ந்த நடனஆசிரியை தனக்கு பயிற்சி தந்தால் அக்காட்சியில் தோன்றுவதற்கு தான் தயார் என்றும் தமது பெற்றோரின் சம்மதத்துடன் செல்வி வாசுகி முன்வந்தார்.
அக்காலப்பகுதியில் மெல்பனில் பிரபல்யமாகியிருந்த நடன நர்த்தகி திருமதி சாந்தி இராஜேந்திரா அவர்களின் மாணவிகள் பங்கேற்ற சில நடன நிகழ்ச்சிகளை பார்த்திருக்கின்றேன். அதில் ஒரு நிகழ்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசனின் சங்கே முழங்கு பாடலுக்கு அம்மாணவிகள் அபிநயம் பிடித்து ஆடியிருந்தனர்.
இந்நிகழ்ச்சி நடந்தது 1988 ஆம் ஆண்டில் என நினைக்கின்றேன். அன்றையதினமே என்னை ஒரு பத்திரிகையாளர் என்று அறிந்துகொண்டு அறிமுகமாகி நண்பரானவர்தான் திரு. இராஜேந்திரா. எமது நண்பர் பேராசிரியர் க. கைலாசபதியின் உறவினர் என்பதையும் அன்றுதான் அறிந்துகொண்டேன்.
அருண். விஜயராணியின் ஏற்பாட்டில் நாம் அந்த இளைஞர்களின் நாடகத்தின் கதையுடன் செல்வி வாசுகியையும் அழைத்துக்கொண்டு திருமதி சாந்தி இராஜேந்திராவை சந்தித்தோம்.
அவரும் வாசுகிக்கு நல்ல பயற்சியை வழங்கினார். அத்துடன் தமது மாணவிகள் சிலரையும் நாடகத்தில் அபிநய முத்திரைகளுடன் சிலையாக தோன்றுவதற்கும் அனுமதி தந்தார். கலையும் கண்ணீரும் சரித்திர நாடகம் மேடையேறி நல்ல வரவேற்பும் பெற்றது.
அதனையடுத்து, வாசுகியின் பெற்றோருக்கு , இலங்கையில் பாதியில் விட்டு வந்த தமது மகளின் நடனக்கலையை இங்கும் வளர்ப்பதற்கு விரும்பி, திருமதி சாந்தி இராஜேந்திராவின் நடனப்பள்ளியில் இணைத்துவிட்டனர்.
1990 ஆம் ஆண்டில் செல்வி வாசுகி இராஜரட்ணத்தின் நடனஅரங்கேற்றம் மெல்பனில் லட்ரோப் பல்கலைக்கழகத்தின் அகோரா அரங்கில் வெகு சிறப்பாக நடந்தது.
அன்று வெளியிடப்பட்ட அரங்கேற்ற மலரில் தமிழும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தகுந்தது.
அதன் பின்னர், 1991 ஆம் ஆண்டு இராஜேந்திரா – சாந்தி தம்பதியரின் செல்வப் புதல்வி சங்கீதாவின் அரங்கேற்றம் மெல்பனில் ( Nunawading Arts Centre ) நனவாடிங் ஆர்ட்ஸ் சென்டரில் நடப்பதற்கு ஏற்பாடாகிக்கொண்டிருந்த வேளையில், அன்பர் இராஜேந்திரா என்னைத் தொடர்புகொண்டு அழைத்ததுடன், ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.
தமது புதல்வியின் அரங்கேற்றத்தில் தமிழிலும் வரவேற்புரை வழங்கப்பட்டு , அரங்கேற்றத்தில் இடம்பெறும் நடனங்கள் பற்றிய அறிமுகக்குறிப்புகள் தமிழிலும் சொல்லப்படவேண்டும். அந்தப்பணியை வந்து செய்து தரமுடியுமா..? எனக்கேட்டார்.
அவருடைய அன்பான வேண்டுகோளில் இழையோடியிருந்த தமிழ்ப்பற்றை புரிந்துகொண்டேன். அவ்வாறே அவருடைய Mount Waverly இல்லத்திற்குச்சென்று திருமதி சாந்தி இராஜேந்திரா அவர்களிடம் குறிப்புகளை பெற்றுவந்து, அரங்கேற்றத்தில் உரையாற்றுவதற்கு நானும் பயிற்சி பெற்றேன். பரத நாட்டியம் தொடர்பாக எந்த பிரக்ஞையும் அற்றிருந்த என்னை , இராஜேந்திரா – சாந்தி தம்பதியர் அந்தத்துறையின் நுட்பங்களையும் நான் அறிந்துகொள்வதற்கு துணையாக நின்றனர்.
குறிப்பிட்ட அரங்கேற்றத்திற்கு முதல் நாள் இரவு நடந்த ஒத்திகை நிகழ்ச்சி அதே Nunawading Arts Centre மண்டபத்தில் இடம்பெற்றது. அதற்கும் அவர் அழைத்திருந்தார்.
அன்று இரவு அவரே என்னை அழைத்துவந்து வீட்டிலும் விட்டார். வரும்வழியில் அவர் உரையாடிய விடயங்களிலிருந்து அவரது தேர்ந்த வாசிப்பு அனுபவங்களைத் தெரிந்துகொண்டேன்.
அவர் தமது அருமைச்செல்வங்களுக்கு சங்கீதா – சாகித்தியன் என பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் இருந்த உள்ளார்ந்த கலை, இலக்கிய தாகத்தை புரிந்துகொள்ளமுடியும்.
மறுநாள் செல்வி சங்கீதாவின் அரங்கேற்றமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த அரங்கேற்றத்தின் படங்களை இலங்கையிலும் , பிரான்ஸிலும் தமிழ் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு நான் ஆவன செய்திருந்ததையிட்டு நன்றியையும் தெரிவித்தார். தொடர்ச்சியாக திருமதி சாந்தி இராஜேந்திராவிடம் கற்ற பல மாணவிகள் அரங்கேற்றம் கண்டுவிட்டனர். மெல்பனில் இதுவரையில் அதிகமான நடன அரங்கேற்றங்களை நடத்தியிருப்பவர்தான் திருமதி சாந்தி இராஜேந்திரா என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
அந்த அரங்கேற்றங்களின்போதெல்லாம் தமது அன்புத்துணைவியாருக்கு பக்கபலமாக இருந்தவர்தான் அன்பர் இராஜேந்திரா.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றும் – ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் ( தாய் அல்லது மனைவி ) இருப்பார் என்றும்தான் காலம் காலமாக எமது தமிழ்ச் சமூகம் சொல்லிவருகிறது.
ஆனால், பெண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஆண்கள் இருந்திருக்கிறார்கள், என்பதையோ, கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றோ எவரும் சொல்வதில்லை.
ஆனால், அன்பர் இராஜேந்திரா அவர்கள் தனது மனைவியினதும் குடும்பத்தினரதும் மட்டுமல்ல, பல நடன மாணவிகளின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு நிழல்போன்று தொடர்ந்து வந்தவர் என்றுதான் சொல்லவேண்டும்.
அவர் தொழில் நிமித்தம் சிட்னியில் வாழ்ந்தபோதிலும் அங்கு நடைபெறும் தமிழ் நிகழ்ச்சிகளிலும் முடிந்தவரையில் வருகைதந்து சிறப்பிப்பார். மெல்பனிலிருந்து அங்கு சென்றிருக்கும் நானே, அங்கு நடந்த பல நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்து உரையாடியிருக்கின்றேன்.
எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் காட்சி தருபவர். மந்திரப்புன்னகையின் சொந்தக்காரர். அவுஸ்திரேலியாவில் வெளியான அனைத்து தமிழ் ஊடகங்களையும் இணைய இதழ்களையும் தவறாமல் படிப்பவர்.
அவருடனான சந்திப்புகளின்போதுதான், அவரது வாசிப்பு அனுபவங்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
பல வருடங்களுக்கு முன்னர் மெல்பன் கரம்டவுன்ஸ் சிவா விஷ்ணு ஆலயத்தில் அவர் தரிசனத்திற்கு வந்திருந்தபோது அக்கோடை காலத்தில் எதிர்பாராதவகையில் அவர் மயக்கமுற்று உடனடியாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அருகில் நின்றதும் நினைவுக்கு வருகிறது. அவரது துணைவியார் சாந்தியும் உடன்சென்றார்.
பின்னர் சந்தித்து அவருடன் உரையாடியபோது, தனது உடல்நலம் பற்றி அதிகம் பேசாமல், எனது சுகங்களைத்தான் கேட்டறிந்தார். காரணம் நானும் இருதய பைபாஸ் சத்திர சிகிச்சைக்குட்பட்டவன் என்பது அவருக்கும் தெரியும்.
எனது எழுத்துக்களைப்படித்துவிட்டு, எமது சமூகம் சார்ந்து என்ன என்ன எழுதவேண்டும்…?! என்றெல்லாம் அவர் ஆலோசனைகள் சொல்வதற்கும் தவறுவதில்லை.
அதிர்ந்துபேசாத, இனிய சுபாவம்மிக்க இராஜேந்திரா பற்றி இப்போது எழுதநேர்ந்ததும் விதிப்பயன்தான். ஆனால், இதனை அவரது ஆத்மா படிக்குமாகவிருந்தால், “ அருமை நண்பரே….. இதனையே உங்களுக்கான எனது அஞ்சலிக்குறிப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் “ என்பேன்.
தமது குடும்பத்தலைவரை இழந்து ஆழ்ந்த துயரத்திலிருக்கும் அன்புத்துணைவியார் திருமதி சாந்தி இராஜேந்திரா, செல்வப்பிள்ளைகள் சங்கீதா, சாகித்தியன் ஆகியோரினதும் அன்னாரின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களினதும் வேதனையில் நானும் பங்கேற்கின்றேன்.
அமரத்துவம் எய்தியிருக்கும் இராஜேந்திராவின் ஆத்மாவுக்கு எமது இதய அஞ்சலி.
முருகபூபதி