தனிமைப்படுத்தல் நடவடிக்கையை 21 நாட்களுக்கு அதிகரிப்பதற்கான யோசனையை தேர்தல் ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது.
தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிற்கான தனிமைப்படுத்தல் காலத்தினை 21 நாட்களுக்கு அதிகரிக்கவேண்டும் என்ற யோசனையை தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளிடம் ஆறாம் திகதி முன்வைக்கவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த யோசனையை முன்வைக்கவுள்ளதாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தேர்தல் வாக்களிப்பு நேரம் முடிவடைவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னர் வாக்களிப்பு நிலையங்களிற்கு கொண்டுவரமுடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு ஆராயவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்களிப்பு நேரத்தை 30 நிமிடங்களால் அதிகரிக்க முடியுமா என ஆராயவுள்ளதாக எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பதற்கான விசேட கண்ணாடிக்கூண்டினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கான விசேட வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய வாக்களிப்பு நிலையங்களின் முகவர்களுக்கு விசேட பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal