பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு இறங்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. எனினும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் ஆதரவு இருப்பதால் நெதன்யாஹு இதில் துணிச்சலுடன் இறங்குகிறார்.
ஒருதலைப்பட்சமானது
பெருந்தொற்றுக்கு நடுவே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளைத் தங்கள் நாட்டுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் அரசு இறங்கியிருக்கிறது. பாலஸ்தீனர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கும் இந்நடவடிக்கைக்கு, இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. எனினும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் ஆதரவு இருப்பதால் நெதன்யாஹு இதில் துணிச்சலுடன் இறங்குகிறார்.
இஸ்ரேலின் இறையாண்மையை மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியேற்றங்களுக்கும், ஜோர்டான் பள்ளத்தாக்கு பகுதிக்கும் விரிவுபடுத்துவது என்பதுதான் இந்த இணைப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம். ஜூலை 1-ல் இதைத் தொடங்குவது என்று இஸ்ரேல் சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தது. இதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் கிட்டத்தட்ட 30 சதவீத நிலத்தை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
இது ஜெனீவாவின் நான்காவது மாநாட்டின் தீர்மானத்தையும், சர்வதேசச் சட்டங்களையும் மீறும் செயல் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குச் சொந்தமான ஒரு நிலப் பகுதியின் மீது தனது அரசியல் ரீதியான, சட்ட ரீதியான, ராணுவ ரீதியான இறையாண்மையை ஒருதலைப்பட்சமாக அறிவிப்பது அல்லது மாற்றம் செய்வது இணைப்பு (Annexation) என்று அழைக்கப்படுகிறது. ஐநாவைப் பொறுத்தவரை இத்தகைய இணைப்பு சட்டவிரோதம் ஆகும்.
மத்திய கிழக்குத் திட்டம்
ட்ரம்ப் அரசு அறிவித்த மத்திய கிழக்குத் திட்டம்தான், இதில் முனைப்புடன் ஈடுபட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவுக்கு உத்வேகம் தந்திருக்கிறது. இதன் சூத்திரதாரி ட்ரம்ப்பின் மருமகனும், ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர்தான். 2020 ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு வந்திருந்த நெதன்யாஹு முன்னிலையில் இந்தத் திட்டத்தை அறிவித்தார் ட்ரம்ப். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் திட்டம் எனும் பீடிகையுடன் இதை அறிவித்த ட்ரம்ப், இதில் பாலஸ்தீனத் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டியதன் அவசியம் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.
அந்த நிகழ்ச்சியின்போது உரையாற்றிய நெதன்யாஹு, “இஸ்ரேலின் இதயமாக இருக்கும் நிலப்பகுதியானது, நீண்டகாலமாக எங்கள் தேசப்பற்றாளர்கள் வழிபட்ட, எங்கள் தீர்க்கதரிசிகள் போதனை செய்த, எங்கள் அரசர்கள் ஆட்சிசெய்த இடமாகும். ஆனால், அது ‘சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என்று மூர்க்கத்தனமாக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. மிகப் பெரிய அந்தப் பொய்யை அதிபர் ட்ரம்ப் உடைத்திருக்கிறார்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின்படி, மேற்குக் கரையில் உள்ள யூத குடியேற்றங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், இஸ்ரேலின் இறையாண்மையை அந்தப் பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதையும் ஆதரிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. இந்தத் திட்டம் பாரபட்சமானது என்பதை அறிந்துகொண்ட பாலஸ்தீனர்கள் இதை ஏற்கவும் இல்லை. எதிர்காலத்தின் பாலஸ்தீனம் இப்படித்தான் இருக்கும் எனும் குறிப்புடன் ஒரு வரைபடத்தையும் ட்விட்டரில் வெளியிட்டார் ட்ரம்ப். அதைக் கடுமையாக விமர்சித்தனர் பாலஸ்தீனர்கள். “இது ஒரு சதி. இது ஒருபோதும் நிறைவேறாது” என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.
செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியா?
எனினும், ட்ரம்ப் தந்த உற்சாகத்தில் நெதன்யாஹு இவ்விஷயத்தில் தீவிரம் காட்டுகிறார். இதில் உள்நாட்டு அரசியல் கணக்குகளும் உண்டு. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. வலதுசாரி ஆதரவாளர்களுக்கு இடையே அவரது செல்வாக்கு குறைந்துவந்தது. அதனால்தான், குறுகிய காலத்துக்குள் மூன்று முறை அவர் தேர்தலைச் சந்திக்க வேண்டிவந்தது. 2019 ஏப்ரல் மாதத்திலும், 2019 செப்டம்பரிலும் தேர்தல் நடந்தும் நெதன்யாஹுவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 2020 மார்ச் மாதம் நடந்த தேர்தலிலும் 29.46 சதவீதம் வாக்குகளையே அவரது லிகுட் கட்சியால் பெற முடிந்தது. இதையடுத்து, மேலும் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, பென்னி கான்ட்ஸ் எதிர்க்கட்சியான ’ப்ளூ அண்ட் ஒயிட்’ கட்சியுடன் கூட்டணி அரசை அமைத்திருக்கிறார். இந்நிலையில், இப்படியான அறிவிப்புகள் மூலம் அவர் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ள முயல்கிறார் என்று கருதப்படுகிறது.
சவப்பெட்டியின் கடைசி ஆணி
பாலஸ்தீன நிலப் பகுதிகளை ஆக்கிரமிப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு ஐநா தீர்மானங்கள் பலவற்றில் வலியுறுத்தப்பட்டிருந்தும் இஸ்ரேல் அதைப் பொருட்படுத்தியதில்லை. 1980-ல் கிழக்கு ஜெருசலேம், 1981-ல் கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளை இப்படி சட்டவிரோதமாக இணைத்துக்கொண்டது இஸ்ரேல்.
இந்தச் சூழலில், “இஸ்ரேலின் இந்தத் திட்டம், சவப்பெட்டியின் கடைசி ஆணியாக அமைந்துவிடும்” என்று பாலஸ்தீன அமைச்சரும், யூதக் குடியேற்றங்களுக்கு எதிரான ஆணையத்தின் தலைவருமான வாலித் அஸ்ஸாஃப் கூறியிருக்கிறார். 1993-ல், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கையெழுத்தான ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கும் இது குந்தகத்தை விளைவிக்கும் என்று பாலஸ்தீனர்கள் கருதுகிறார்கள். இஸ்ரேல் இணைத்துக்கொள்ளும் பகுதிகளில், சர்ச்சைக்குரிய ஜோர்டான் பள்ளத்தாக்கும் அடங்கும். இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள வளமான விவசாய நிலங்களையும், நீர் வளத்தையும் தங்களால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என்றும் பாலஸ்தீனர்கள் அஞ்சுகிறார்கள்.
“இந்நடவடிக்கை தொடர்ந்தால், 1967 போருக்கு முன்னர் இருந்ததைப் போல எல்லைகளை வகுத்துத் தன்னிச்சையாக ஒரு தேசத்தை உருவாக்கிக் கொள்வோம்” என்று பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ஷ்டேயே எச்சரித்திருக்கிறார். மிகப் பெரிய மோதல் ஏற்படும் என்று ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
உள்ளும் புறமும் எதிர்ப்புகள்
நெதன்யாஹுவின் இம்முயற்சியை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. பாலஸ்தீனப் பகுதிகளை இணைக்கும் நடவடிக்கையை எதிர்த்து, 25 ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் வெளியாகியிருக்கிறது. யெடியோட் அஹ்ரோனாட் (Yediot Ahronot) எனும் இஸ்ரேலிய இதழில் இதுதொடர்பாகக் கட்டுரை எழுதியிருக்கும் போரிஸ் ஜான்ஸன், “இதுபோன்ற ஒருதலைபட்சமான நடவடிக்கையை பிரிட்டன் ஒருபோதும் ஆதரிக்காது” என்று கறாராகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நடவடிக்கை இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் இரு நாடுகளாக அறிவிக்கும் திட்டமும் பாதிப்புக்குள்ளாகும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது சட்டவிரோதமானது என்று ஐநா மனித உரிமை ஆணையர் மிஷேல் பெச்சலெட்டும் கண்டித்திருக்கிறார்.
இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று இஸ்ரேல் முன்னாள் ராணுவத்தினரும், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளும் எச்சரித்திருக்கிறார்கள். இந்நடவடிக்கை ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். இஸ்ரேலின் இடதுசாரி சிந்தனை கொண்ட தொழிலாளர் கட்சி, மெரெட்ஸ் ஆகிய கட்சிகளும் நெதன்யாஹு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றன.
அமெரிக்காவின் இரட்டை நிலை
2014-ல் உக்ரைனின் க்ரீமியா தீபகற்பத்தை ரஷ்யா இப்படி இணைத்துக்கொண்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த அமெரிக்கா, இன்றைக்கு இஸ்ரேலின் ‘இணைப்பு’ நடவடிக்கைக்கு ஆதரவாக நிற்பது கவனிக்கத்தக்கது.
அதேசமயம், இவ்விஷயத்தில் அமெரிக்கா மிகவும் கவனமாகச் செயல்படுகிறது. இதுதொடர்பாக ஏப்ரல் 22-ல் கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது இஸ்ரேல்தான். இதுதொடர்பான கருத்துகளைத் தனிப்பட்ட முறையிலேயே இஸ்ரேலிடம் தெரிவிப்போம்” என்று கூறியிருந்தார். “அதேசமயம், ட்ரம்ப் அரசு ஒரு அமைதித் திட்டத்தைத்தான் விரும்புகிறதே ஒழிய, இணைப்புத் திட்டத்தை அல்ல” என்று இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஃப்ரீட்மேன் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
குழப்பங்கள்
எல்லாவற்றையும் தாண்டி, இணைப்பு தொடர்பான அறிவிப்புகளில் ஒரு குழப்பத்தன்மை இருப்பதை உணர முடிகிறது. ஜூலை 1-ல் இணைப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்நடவடிக்கையை இத்தனை சீக்கிரம் தொடங்க வேண்டியதில்லை என்று கூட்டணிக் கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸ் அதிருப்தி தெரிவித்தார். கரோனா வைரஸ் பரவலின் விளைவாக ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவு, கரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் சூழல் ஆகியவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பது பென்னி கான்ட்ஸின் நிலைப்பாடு.
இந்நடவடிக்கைகள் ஜூலை 1-ல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் உடனடியாகத் தொடங்கப்படாது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் கபி அஷ்கெனாசி கூறியிருக்கிறார். எனினும், இந்நடவடிக்கையிலிருந்து இஸ்ரேல் எளிதில் பின்வாங்குவதாகவும் தெரியவில்லை.
அமெரிக்காவில் ஏற்கெனவே, பெர்னி சாண்டர்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். ஒருவேளை அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நெதன்யாஹுவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடப்படலாம். அதற்குள் இந்தப் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு!
வெ.சந்திரமோகன்