ஆயுதம் தாங்கிய ஒருவரின் படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த இளைஞரிடம் மூன்று மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு சென்று வந்த இளைஞரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் யாழ்ப்பாண ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விசாரணைக்குள்ளாக்கப்பட்ட இளைஞர் மேலும் கூறியுள்ளதாவது;
வவுனியாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணித்தலைவரின் ஆயுதம் தாக்கிய புகைப்படம் ஒன்றினை எனது முகநூலில் அண்மையில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதற்காகவே, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று முன் தினம் செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் தொடங்கி பிற்பகல் 12 வரை என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் புகைப்படம் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிவந்தமை தொடர்பாகவும் இந்த விடயத்துடன் தொடர்புடையவரின் விவரங்களும் விசாரணைகளின்போது மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டன என்றார்.