கல்வியின் அவசியத்தை உணர்த்தும் “சாயா “

இது பேய் படங்களின் சீசன். புதுமுக இயக்குனர்கள் ரூம் போட்டு விதவிதமான பேய் கதைகள் பற்றி யோசிக்கிறார்கள். பேய் அரசியலுக்கு மட்டும்தான் வரவில்லை. மற்ற எல்லாவற்றையும் பேய் செய்ய ஆரம்பித்து விட்டது. சாயா என்ற படத்தில் பேய் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறதாம்.

இந்தப் படத்தில் புதுமுகம் சந்தோஷ் ஹீரோ, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின். இவர்கள் தவிர சோனியா அகர்வால் கவர்ச்சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன், பாய்ஸ் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் தயாரித்துள்ளார். ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளா . இசை அமைத்து இயக்கி உள்ளார் வி.எஸ்.பழனிவேல்.படத்தின் பணிகள் முடிந்து அடுத்த மாதம் வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குநர் வி..எஸ்.பழனிவேல் கூறியதாவது:

பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது சாயா ; கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ”சாயா” படம் ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது .

படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளோம். சோனியா அகர்வால் விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடி நாயகியாக நடித்து பிரமிக்க வைத்து உள்ளார். என்கிறார் இயக்குநர் பழனிவேல்.