விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாகக் கடந்த மாதம் கிளிநொச்சியில் 22 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என வடக்கிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையோடு மாதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என ஜூன் மாதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுவன் என பெற்றோரினால் பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட எவர் தொடர்பிலும் இதுவரை எந்த நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.